Published : 17 May 2019 10:11 PM
Last Updated : 17 May 2019 10:11 PM

அதிமுக ஆட்சி வரும் 23-ம் தேதி தானாகவே கவிழும்:  ஸ்டாலின் பிரச்சாரம்

அதிமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சி தானாக 23-ம் தேதி கவிழ்ந்து விடும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரமாக அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

''எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வருகின்ற 19-ம் தேதி நடைபெறவிருக்கக் கூடிய அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து நம்முடைய வேட்பாளர் செந்தில் பாலாஜியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

தற்போது இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழ்நிலைக்கு வந்துள்ளது. 23-ம் தேதி வாக்கு எண்ணப்படும் பொழுது மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகின்றது. அதேபோல், இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சியும் கவிழப் போகின்றது அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராகச் சென்று இப்பொழுது என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  தொடர்ந்து என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார் என்கிறார். யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த ஆட்சி தானாக 23-ம் தேதி கவிழ்ந்து விடும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதுதான் தற்போது இருக்கக்கூடிய உண்மை.

நாளை மறுதினம் இந்த அரவக்குறிச்சி தொகுதியோடு சேர்ந்து, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறப் போகின்றது. ஏற்கெனவே நடந்து முடிந்த 18 தொகுதிகளில் திமுக வெற்றி பெறப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறப்போகின்றது. அதில் எந்தளவும் சந்தேகம் இருக்கவேண்டிய அவசியமில்லை.

எனவே, மொத்தம் 22 தொகுதிகளின் வெற்றியைத் தொடர்ந்து, ஏற்கெனவே நம்மிடம் இருக்கின்ற 97 எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலை வரும்போது மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் திமுக மெஜாரிட்டியான ஆட்சியினை அமைக்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகின்றது. திமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திட, எடப்பாடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப நீங்கள் எல்லோரும், நம்முடைய வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கின்ற நேரத்தில், இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் செந்தில் பாலாஜி காத்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி ஒரு அருமையான திட்டத்தை அறிவித்து இருக்கின்றார். வீட்டுமனை இல்லாத 25,000 பேருக்கு, 3 சென்ட் வீட்டுமனை நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். இது அரவக்குறிச்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்படுத்த வேண்டிய திட்டம் என்பதை உணர்ந்து திமுகவின் சார்பிலும் நான் அறிவித்திருக்கின்றேன்.

சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய மக்களுக்கு இன்னல்களை, தொல்லைகளை, துன்பங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாகத்தான் மோடி தலைமையில் அமைந்திருக்கக்கூடிய ஆட்சி இருந்திருக்கிறது. எனவே அந்த ஆட்சிக்கு அடிபணிந்து போகக்கூடிய ஒருஆட்சியாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x