Last Updated : 15 May, 2019 08:36 AM

 

Published : 15 May 2019 08:36 AM
Last Updated : 15 May 2019 08:36 AM

விவசாயிகளின் தேவைக்கேற்ப குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுமா?

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ற வகையில், ஒவ்வொரு வட்டத்திலும் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மாவட்டத்தில் பின்னலாடைத் தொழிலுக்கு அடுத்து, விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. சுமார்  30 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். மொத்தமுள்ள  4,72,629 ஹெக்டேரில் 1,84,645 ஹெக்டர் பரப்பில் சாகுபடி நடைபெறுவதாக  வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், விவசாயிகளின் தேவையறிந்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்பதே உழவர்களின் கோரிக்கை. குறிப்பாக,  குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ள குளிர்பதனக் கிடங்குகள் போதிய கொள்ளளவு இல்லாத காரணத்தால், அதிக கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக பிஏபி பாசன சபை கிளைத் தலைவர் பொங்கலூர் கோபால் கூறும்போது, “ஏற்கெனவே சில இடங்களில் உள்ள குளிர்பதனக் கிடங்குகள், போதிய அளவில் இல்லை. உதாரணமாக, பொங்கலூரில் உள்ள குளிர்பதனக் கிடங்கு 15 டன் மட்டுமே கொள்ளளவு கொண்டது.

பரவலாகப் பயிரிடப்படும்  சின்ன வெங்காயத்தை பாதுகாத்து வைக்க  விவசாயிகள் இதைப் பயன்படுத்தினர். ஆனால், குறைந்த கொள்ளளவே உள்ளதால், ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டுமே பயன்பெறுகின்றனர்.  அதிக விவசாயிகள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் விளைநிலங்களில் இருந்து சின்ன வெங்காயத்தை கிடங்குக்கு  எடுத்துச் சென்று, இடமில்லாததால் திரும்பி கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. பலரும் பாரம்பரிய முறைப்படி வயல்களிலேயே வெங்காயத்தை பாதுகாப்புடன் இருப்பு வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்கின்றனர்.

எனவே, அரசு சார்பில் 50 டன் கொள்ளளவு கொண்ட பெரிய குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும். அப்போதுதான், வெங்காயம் தவிர, தேங்காய் உள்ளிட்ட  பிற பயிர்களையும் பாதுகாத்து வைக்க முடியும். மேலும், விளைநிலங்கள் அருகே,  குறிப்பிட்ட தூர இடைவெளிக்கு ஒன்று எனத்  திட்டமிட்டு அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் குறையும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலர் ஆர்.குமார் கூறும்போது, “பாரம்பரிய முறையில் வெங்காயத்தை 3 மாதங்கள் வரை கெடாமல் வைத்து விற்க முடியும். இதர காய்கறிகளைப் பாதுகாக்க அப்படி வழியில்லை. எனவே, குளிர்பதனக் கிடங்குகள் அமைப்பது அவசியமாகும்.

திருப்பூர் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படும் காய்கறிகளுடன், மலைப் பிரதேச காய்கறிகளான முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. அறுவடையின்போது உரிய விலை கிடைக்காவிட்டால், நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. அதேசமயம், குளிர்பதனக் கிடங்குகள் இருந்தால், உரிய விலை கிடைக்கும்வரை காய்கறிகளைப் பாதுகாக்க முடியும். எனவே,  விவசாயிகளின் தேவைக்கேற்ப குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்றார். மேலும், ஒட்டுமொத்த  விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டுமென விவசாயிகள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை பகுதிகளில் குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. காங்கயத்தில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் நெய் மட்டும் இருப்புவைத்து விற்பனை செய்கின்றனர். ஏற்கெனவே உள்ள கிடங்குகளை, விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும்,  புதிய கிடங்குகள் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x