Last Updated : 17 May, 2019 10:58 AM

 

Published : 17 May 2019 10:58 AM
Last Updated : 17 May 2019 10:58 AM

என்னைக் கைதுசெய்தால் பதற்றம் அதிகரிக்கும்: வேண்டுகோள் அல்ல;அறிவுரை: கமல் ஹாசன் எச்சரிக்கை

தன்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும், இது வேண்டுகோள் அல்ல அறிவுரை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சியில் கடந்த இரு நாட்களுக்கு முன்  மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் கமல் ஹாசன் " சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. இதை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனாக கூறுகிறேன்" எனப் பேசி இருந்தார்.

கமல் ஹாசனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதில் ஆவேசமாகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவிநீக்கம் செய்யக் கோரி கமல் ஹாசன் வலியுறுத்தினார். மேலும், அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் அளித்துள்ளனர்.

மேலும், கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் வில்லிவாக்கம், மடிப்பாக்கம், விருகம்பாக்கம், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுவதும் 36 காவல் நிலையங்களில் பாஜகவினர், இந்து அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இதில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மட்டும் 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே முன்ஜாமீன் கோரி கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதிக்குஉட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி முட்டை, காலணிகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், கோவை சூலூரில் இன்று நடக்க இருந்த பிரச்சாரத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கோட்சே குறித்து பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று நான் பேசியதில் தவறு இல்லை. இந்த கருத்தை நான் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட சென்னையில் பேசினேன் அப்போது பெரிதுபடுத்தாதவர்கள், இப்போது தோல்வி பயத்தால், நம்பிக்கை இழந்தவுடன் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்திவிட்டனர். நான் பேசியது சமூக ஒற்றுமையை வலியுறுத்திதான் பேசினேன்.

நான் உங்களுக்கு சொல்கிறேன், அனைத்து மதங்களிலும் தீவிரவாதி இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்துக்கும் சொந்தமாக தீவிரவாதி இருக்கிறார்கள். நாங்கள் புனிதமானவர்கள் என்று நாம் உரிமை கோர முடியாது. நாம் அதைச் செய்யவில்லை. அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் இருந்தார்கள் என்பதை வரலாறு கூறுகிறது.

எனக்கு முன்ஜாமீன் கிடைக்காவிட்டால், நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை. என்னை போலீஸார் கைது செய்யட்டும். ஆனால், என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். இது என்னுடைய வேண்டுகோள் அல்ல அறிவுரை

சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதில் அரசியல் இருக்கிறது. அவ்வாறு பதற்றமான நிலை சூலூரில் இருந்தால், ஏன் இடைத் தேர்தலை தள்ளிவைக்கக்கூடாது " என்று தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x