Published : 20 May 2019 12:14 PM
Last Updated : 20 May 2019 12:14 PM

மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்: வைகோ

மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) வைகோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று சொல்கிறதே?

22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவர். அகில இந்திய அளவில் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என நான் யூகிக்கிறேன். கருத்துக்கணிப்பு பற்றி வேறு எதுவும் நான் கருத்து கூறுவதற்கு இல்லை. 2004 பொதுத்தேர்தலிலும் கருத்துக்கணிப்புகள் பொய்த்தன. சில நேரங்களில் கருத்துக்கணிப்புகளைப் போன்றே தீர்ப்புகள் அமைந்திருக்கின்றன. இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

மோடி பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்துள்ளாரே?

பத்திரிகையாளர்களை அவர் சந்திக்கவில்லையே. 5 ஆண்டுகள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்து, அமித் ஷா கேள்விகளுக்கு பதிலளிப்பார் என சொல்லிவிட்டு பிரதமர் அமைதியாக இருந்தார். அவருடைய பல உத்திகளில் இதுவும் ஒன்று.

இதையடுத்து, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய வைகோ, "274 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு செய்வதற்கும் கிணறுகள் அமைப்பதற்கும், அனுமதி அளித்திருப்பது, குறிப்பாக வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

கடுமையான போராட்டங்கள் நடைபெறுகின்றன. நடவு செய்த வயல்களிலே இறங்கி அதனை முழுமையாக அகற்றும் கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனே அறிவித்திருக்கின்றனர். இது வஞ்சகமான சதி. அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உடந்தையாக இருக்கிறது.

ஒட்டுமொத்த காவிரி டெல்டா மக்கள் இதற்கு எதிர்ப்பாக இருக்கின்றார்கள். எல்லோரும் சேர்ந்து போராடக்கூடிய நிலை உருவாகி வருகிறது. காவல்துறையின் உதவியுடன் தான் அவர்கள் பொக்லைன்களை இறக்குகின்றனர், குழாய்கள் பதிக்கின்றனர். நெற்பயிரில் இறங்கி இப்படி செய்வது, தமிழக சரித்திரத்தில் நடக்காத அக்கிரமம். இதற்கு கடுமையான கண்டனங்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x