Last Updated : 09 May, 2019 07:33 AM

 

Published : 09 May 2019 07:33 AM
Last Updated : 09 May 2019 07:33 AM

தங்குவதற்கு முன்னேற்பாடு இல்லாததால் குமரியில் சந்திரசேகர ராவ் அலைக்கழிப்பு

கன்னியாகுமரி வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்குவதில் பெரும் குழப்பம் நிலவியதால் குடும்பத்துடன் அலைக்கழிக்கப்பட்டார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் கேரளம் மற்றும் தமிழகத்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். கேரளாவில் சுற்றுலா முடிந்த பின்னர், அங்கிருந்து கார் மூலம் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். வழியில் தக்கலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதியம் உணவருந்தினார். கன்னியாகுமரியில் கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டலில் தங்குவதற்காக அவர் சென்றார். அங்கு போதிய முன்னேற்பாடுகள் இல்லை எனவும், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் மற்றும் கடற்கரையை பார்த்து ரசிக்க போதிய வசதி அங்கு இல்லை எனவும் புகார் கூறினார்.

சந்திரசேகர ராவுடன் வந்திருந்த அவரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை கேரள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறிதுநேரம் இருந்த நிலையில் லிப்ட் வசதி இல்லாததால், ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் தமிழக விருந்தினர் மாளிகைக்கு சந்திரசேகர ராவும், அவரது குடும்பத்தினரும் இடம்மாறினர். அவரின் பாதுகாப்பு அதிகாரிகள், குடும்பத்தினரின் உடமைகளை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தனர்.

தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் யாரும் சந்திரசேகர ராவை வரவேற்க வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் அறையில் அவர் தங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யவில்லை. இதனால், குடும்பத்துடன் வந்த முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கன்னியாகுமரியில் பெரும் தவிப்புக்குள்ளானார். நேற்று மாலை தமிழக சுற்றுலா மாளிகையில் இருந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்த அவர், இன்று காலை சூரிய உதயத்தை பார்த்துவிட்டு பகவதியம்மன் கோயில், தாணுமாலய சுவாமி கோயில் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் ராமேசுவரத்துக்கு காரில் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x