Published : 01 May 2019 09:53 AM
Last Updated : 01 May 2019 09:53 AM

புத்துயிர் பெறுமா பவானி தடுப்பணை திட்டம்?

பருவமழைக் காலங்களிலும், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பெய்யும் மழை நீர், வீணாக கடலுக்கு சென்று கலப்பதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நேரம் இது. மக்களவைத் தேர்தலின்போது “ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகாத வகையில் காவிரியில் தடுப்பணைகள் கட்டப்படும்” என்பதே தமிழக முதல்வர் பழனிசாமியின் முழக்கமாக இருந்தது. இதேபோல, பவானிசாகர் அணையில் இருந்து, கூடுதுறை வரையிலான 80 கிலோமீட்டர் தொலைவு  இடைவெளியில், பவானி ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும் என்பது பவானி ஆயக்கட்டுதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆறு காவிரியில் கலக்கும் கூடுதுறைவரை, மேற்குத்  தொடர்ச்சி மலையையொட்டி, பவானி ஆறு பயணிக்கும் தூரம் 80 கிலோமீட்டர் என அளவிடப்படுகிறது. இந்த இடைவெளியில் தடுப்பணைகள் எதுவும் இல்லை.

பவானி ஆற்றுக்கு பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தவிர, ஆற்றுப் பகுதியை ஒட்டியுள்ள பெரியகுளம், பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம், கம்பத்ராயன் பள்ளம், வேதபாறை, கரும்பாறை, தண்ணீர் பந்தல் பள்ளம் உள்ளிட்ட 14 பள்ளங்கள் வாயிலாக, மழைக் காலங்களில் பெருமளவு நீர்  சேருகிறது. இந்த நீர், பவானி ஆற்றின் வழியாக, காவிரி ஆற்றில் கலக்கிறது.

பொதுவாக, பருவமழைக் காலங்களில், காவிரி டெல்டா பகுதிகளிலும் மழை பெய்வதால், காவிரி நீர் பயன்பாடு அங்கும் குறைந்து விடும் நிலையில், மொத்த மழை நீரும் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.

இவ்வாறு வீணாகும் நீரை முறையாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்கிறார் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி.

“பருவமழைக் காலங்களில் பவானி ஆற்றில் இருந்து சராசரியாக 6 டிஎம்சி உபரி நீர் காவிரியில் கலந்து வருகிறது. இந்த நீரைச் சேமிக்க, பவானிசாகர் அணையிலிருந்து கூடுதுறை வரையிலான இடைப்பட்ட தூரத்தில் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டினால், அதில், 3  டி.எம்.சி. வரையிலான நீரைச் சேமிக்க முடியும். மேலும், இப்பணியை மேற்கொண்டால் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தடி நீர் மேம்படும்.

இத்துடன், ஒவ்வொரு தடுப்பணையின் மூலமும் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சத்தியமங்கலம், கோபி, அத்தாணி, தளவாய்ப்பட்டணம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் 5 கூட்டுக்  குடிநீர் திட்டங்களுக்கும், ஏழு பேரூராட்சி மற்றும் 22 ஊராட்சிகளுக்கும் குடிநீர்த் தேவையை தீர்க்கவும் உதவியாக இருக்கும்.

பவானிசாகர் அணையின் ஆயக்கட்டுதாரர்கள்  நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலையில், கொடிவேரி அணைக்கு முன்பாக கட்டப்படும் தடுப்பணை மூலம் சேமிக்கப்படும் நீரை,  கொடிவேரிப் பாசனத்துக்குப்  பயன்படுத்திக் கொள்ள முடியும்.

காலிங்கராயன் அணைக்கு முன்பாக சேமிக்கும் நீரை, காலிங்கராயன் பாசனத்துக்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம்,  பவானிசாகர் அணையில் இருந்து நீர் எடுக்க வேண்டிய தேவையும் குறையும்” என்றார்.

இந்த திட்டம் குறித்து மத்திய அரசின் முறைசாரா நீர்தேக்கம் மற்றும் தடுப்பணை குழுவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், 2011-ல் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில், ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் இந்த திட்டம் குறித்து பெரிய அளவில் யாரும் அழுத்தம் கொடுக்காததால் முடங்கிப் போயுள்ளது எனக் கூறும் விவசாயிகள்,  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் பாலம் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் தற்போது உள்ளது. இப்பகுதியில் பாலம் கட்டுவதற்குப் பதிலாக, தடுப்பணையாகக் கட்டினால், நீரை சேமிப்பதுடன், போக்குவரத்துப் பயன்பாடு, மின்சார உற்பத்திக்கும் உதவும்.

ஏற்கெனவே 2011-ல் நிபுணர்கள் அளித்த அறிக்கையின்படி, பவானி ஆற்றில் ஐந்து தடுப்பணைகளையாவது கட்ட வேண்டும் என்று  வலியுறுத்தும் விவசாயிகள், இப்பணியை மேற்கொண்டால் அவிநாசி-அத்திக்கடவு திட்டம், பெருந்துறைக்கான கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்றவற்றுக்குத் தேவையான நீராதாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதியாளர்களின் முயற்சி !

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத்தினர், திருப்பூரில் இயங்கும் ஏற்றுமதி நிறுவனத்தினரின் பங்களிப்புடன்

நீர் சேமிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன்படி, பவானி ஆற்றில் உபரி நீர் வரும் காலங்களில் அரசின் அனுமதியுடன், சத்தியமங்கலம், பவானி வரையிலான பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வரை பயன்பெறும்.  ஏற்றுமதி நிறுவனங்களின் சமுதாயப் பணிக்கான நிதியைக் (சி.எஸ்.ஆர். நிதி) கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றலாம்

 என ஆலோசித்து வருகின்றனர். தற்போது அடிப்படை நிலையில் உள்ள இந்த திட்டம் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகளிடம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x