Published : 13 May 2019 08:50 PM
Last Updated : 13 May 2019 08:50 PM

சந்திரசேகர் ராவுடன் சந்திப்பு; ஸ்டாலின் விளக்கம்

ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவு வரும் மே 23 அன்று வர உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்டாலின் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார். கூட்டணிக் கட்சியில் திமுக மட்டுமே அப்படி அறிவித்தது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து தேசிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மெஜாரிட்டி இடங்களைக் கைப்பற்றினால் பிரச்சினை இல்லை.

ஆனால், அப்படி நடக்காமல் போனால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரை ஸ்டாலின் சந்திக்க மாட்டார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் இன்று சந்திரசேகர் ராவ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். அப்போது  துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பின் நோக்கம் குறித்த பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில் சந்திரசேகர் ராவ் பேட்டி எதுவும் அளிக்காமல், புறப்பட்டுச் சென்றார்.

சந்திப்பு  குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தம்மை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவர் சந்திப்பில் மூன்றாவது அணி குறித்து பேசப்பட்டதா? சந்திரசேகர் ராவை ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தாரா?, ஸ்டாலினை பாஜக கூட்டணிக்கு சந்திரசேகர் ராவ் அழைத்தாரா? என பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x