Published : 26 May 2019 10:45 AM
Last Updated : 26 May 2019 10:45 AM

30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஓட்டப்பிடாரம் தனி தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் இதுவரை நடந்த 13 சட்டப்பேரவை தேர்தல்களில் 3 முறை காங்கிரசும், சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், திமுக ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 முறை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். 4 முறை அதிமுக வாகை சூடியுள்ளது.

எம்.முத்தையா 1967-ல் சுதந்திரா கட்சி சார்பிலும், 1971-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் சார்பிலும், 1989-ம் ஆண்டு திமுக சார்பிலும் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், புதிய தமிழகம், பாஜக, சமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அதிமுக தற்போதைய இடைத்தேர்தலை சந்தித்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகம் கட்சிக்கு தனி செல்வாக்கு உண்டு. மேலும், அதிக முறை வென்றதால் அதிமுகவுக்கும் தனியாக வாக்கு வங்கி இருக்கிறது.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜனை விட திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2வது இடம் பிடித்தார்.

இதனால் தற்போது அதிமுகவுடன் புதிய தமிழகம் இணைந்திருப்பது பெரிய பலமாக பார்க்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் பி.மோகன் ஏற்கனவே 2006-11-ம் ஆண்டு வரை ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளதால் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். 6 அமைச்சர்கள் தொகுதியில் தங்கியிருந்து பிரச்சாரம் மேற்கொண்டது, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் 2 முறை இங்கு வந்து மோகனுக்காக வாக்கு சேகரித்தது ஆகியவை கூடுதல் பலனை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கணக்கையெல்லாம் தவிடு பொடியாக்கி அதிமுக வேட்பாளர் மோகனை விட திமுக வேட்பாளர் செ.சண்முகையா 19,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, ‘‘எம்.சி.சண்முகையாவுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை பிரச்சாரம் மேற்கொண்டார். மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆஸ்டின் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவே எங்களுக்கு பெரிய பலமாக அமைந்தது. மேலும், சண்முகையாவின் மனைவி சுகிர்தா 2006 - 11-ம் ஆண்டு வரை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவராக பணியாற்றி உள்ளார். இவையெல்லாம் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x