Published : 10 May 2019 05:21 PM
Last Updated : 10 May 2019 05:21 PM

புது செல்போன் பழுது; மாற்றித்தர மறுக்கும் ஷோரூம்: நுகர்வோர் சட்டம் என்ன சொல்கிறது?- வழக்கறிஞர் விளக்கம்

செல்போன் ஷோரூம்களில், விற்பனை மையங்களில் அத்துமீறல் நடந்தாலும் அதிலிருந்து நம் உரிமையைப் பெற நுகர்வோர் சட்டம் நம்மிடம் உள்ளது என்று வழிகாட்டுகிறார் வழக்கறிஞர் பிரம்மா.

சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரியைச் சேர்ந்த ஏழுமலை தனது மகன் பிளஸ் 2-வில் பாஸ் ஆனதை அடுத்து 14 ஆயிரம் கொடுத்து ஆசை ஆசையாக செல்போன் வாங்கிப் பரிசளிக்க, அதை இயக்கியபோது பழுதானது தெரியவந்தது. திரும்ப ஷோரூமில் கொடுத்து மாற்று செல்போன் கேட்டபோது மாற்ற முடியாது ரிப்பேர் செய்துகொள்ளுங்கள் என சர்வீஸ் சென்டருக்கு அனுப்பினர்.

அங்கு மாதக்கணக்கில் ஆகும் என்று கூறியதால் மீண்டும் ஷோரூமுக்கு வந்து ஏழுமலை முறையிட, அங்கு கிடைத்த அலட்சியமான பதிலால் என்ன செய்வது என்று தெரியாமல் விரக்தியுடன் வெளியே வந்தவர் ஷோரூம் வாசலில் பெட்ரோல் ஊற்றி புதிய செல்போனை எரித்து விட்டுச் சென்றார்.

இது சாதாரணமாக கடந்துபோகும் சம்பவமல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. இதற்காக ஷோரூம் ஆட்களுடன் சண்டையிடுவதைவிட நுகர்வோர் சட்டப்படி நமது உரிமையைப் பெறலாம்.

அந்த தந்தை செல்போனை எரிக்காமல் என்ன செய்திருக்கவேண்டும் என்பது குறித்து நுகர்வோர் அமைப்பில் நீண்ட அனுபவம் உள்ள வழக்கறிஞர் பிரம்மாவிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில்  கேட்டபோது அவர் கூறியதாவது:

செல்போனை மாற்றித் தராத மன உளைச்சலில் 14,000 ரூபாய் செல்போனை ஷோரூம் முன் எரித்துள்ளார் வாடிக்கையாளர். இதில் அவருக்கு நியாயம் கிடைக்க வழியே இல்லையா?

செல்போன் ஷோரூம்களில், விற்பனை மையங்களில் அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போதிய சட்டம் நம்மிடம் உள்ளது. செல்போன் வேலை செய்யவில்லை என்றால் அதை அதிகாரபூர்வ சர்வீஸ் சென்டரில் ரிப்பேருக்குக் கொடுத்துவிட வேண்டும்.

அங்கு அவரது செல்போனை 72 மணி நேரத்திற்குள் அதை சரி செய்துகொடுக்க வேண்டும் அப்படி முடியாவிட்டால் அவர்களுக்கு ரீபிளேஸ்மென்ட் செல்போனை அதே மாடலில் அவர்கள் தர வேண்டும்.

அப்படி நடக்காத பட்சத்தில் அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால் அவருக்கான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். நஷ்ட ஈடும் கிடைக்கும். நுகர்வோர்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடித்தான் ஆகவேண்டும்.

செல்போனை எரித்த தந்தைக்கு ஏன் இவ்வளவு மன உளைச்சல்?

பொதுவாக ஷோரூம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக நடப்பது, வாடிக்கையாளர்கள் மனம் நோகும்படி, வாடிக்கையாளரை பல வாடிக்கையாளர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையில் பேசுவது, உரிய பதில் அளிக்காமல் மன உளைச்சலை ஆளாக்குவது நடக்கிறது.  

இதற்குக் காரணம் குறைந்த சம்பளத்தில் ஆட்களை நியமிப்பது, இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத ஆட்களை, பார்ட் டைம் வேலைக்கு வருபவர்களை நியமிப்பது போன்ற காரணங்களால் அவருக்கு அவமானகரமான அனுபவம் கிடைத்திருக்கும்.

சிலர் அந்த நேரத்தில் டென்ஷனாகிச் சென்று விடுகிறார்கள். தொடர்ந்து இதற்கு பரிகாரம் காணவேண்டும் என யாரும் செயல்பட மாட்டார்கள். அவர் செல்போனை எரித்ததற்குப் பதில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியிருந்தால் 90 நாட்களில் அவருக்கு நஷ்ட ஈட்டுடன் புது செல்போன் கிடைத்திருக்கும்.

நீங்கள் நீதிமன்றத்தை நாடச் சொல்கிறீர்கள். அதற்கு வழக்கறிஞர் வைக்க வேண்டும், நீதிமன்றத்துக்கு அலைய வேண்டும். இருக்கும் பிரச்சினையில் இதுவேறு  என்று நினைக்கலாம் அல்லவா?

அப்படி எல்லாம் இல்லை. வழக்கறிஞர் வைக்கவேண்டும் என அவசியம் இல்லை. நீங்களே நேரடியாகச் சென்று புகார் அளிக்கலாம். சென்னையில் பார்க்டவுனில் பழைய டிஎன்பிஎஸ்சி அலுவலகம் இருந்த அதே கட்டிடத்தில் நுகர்வோர் நீதிமன்றம் உள்ளது. அங்கு வடசென்னை, தென் சென்னை என இரண்டு நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் பாரிமுனையில் உள்ள அந்த அலுவலகத்துக்குச் சென்றால் உங்கள் முகவரி 2 நீதிமன்றங்களில் எதில் வருகிறது என்று கேட்டால் விவரம் சொல்வார்கள். அதில் உங்கள் முகவரி வரும் நீதிமன்றத்தில் அவர்கள் தரும் படிவத்தைப் பூர்த்தி செய்து நீங்களே நேரடியாகப் புகார் அளிக்கலாம். 90 நாட்களில் அதற்குத் தீர்வு கிடைக்கும்.

எனக்கு அங்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

மொத்தம் 3 அடுக்குகள் உள்ளன. 1. மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம். இங்கு உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செல்லலாம். அங்கும் நீதி இல்லை என்றால் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் செல்லலாம்.

தமிழகம் முழுவதும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளதா?

ஆமாம். சென்னையில் வடசென்னை, தென்சென்னை என இரண்டும் உள்ளன. மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்உள்ளன. இது மாவட்ட ஆட்சியரின் கீழ்தான் இது இயங்குகிறது. அவர்தான் நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர். இதில் சென்னை, மதுரை, கோவை, நெல்லையில் மட்டும்தான் அதிக அளவில் வழக்குகள் வருகின்றன. மற்ற மாவட்டங்களில் மாதம் 10 வழக்குகள் வந்தால் பெரிய விஷயம்.

இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லையே?

இதற்காக அரசு ஏராளமான நிதி ஒதுக்குகிறது. கல்லூரி அளவிலேயே விழிப்புணர்வுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதைச் செயல்படுத்துவதில்லை. அதுதான் பிரச்சினை.

இவ்வாறு பிரம்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x