Published : 18 May 2019 11:05 AM
Last Updated : 18 May 2019 11:05 AM

இந்து அடையாளத்தை அழிக்க நினைக்கிறார் கமல்: எச்.ராஜா சாடல்

வரலாற்றில் இந்து என்ற மதக்குறிப்பே இல்லை என நீண்ட விளக்கத்தை அளித்த கமல்ஹாசனுக்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முஸ்லிம் என்ற அடையாளம் வேண்டாம் கிறித்தவர் என்ற அடையாளம் வேண்டாம் என்பாரா ? அவர்களுக்கு மட்டும் இந்தியர் என்ற அடையாளம் போதாதா? ஓ இவர் அழிக்க நினைப்பது இந்து அடையாளத்தை தான் என்பது தெளிவு"  எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கமல்ஹாசன், "‘சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றனர் மத்திய, மாநில அரசுகள்.

மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயம் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ ‘இந்து’ என்ற நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை. நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக் கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்துக்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு... ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி! ’தமிழா’ நீ தலைவனாக வேண்டும்' என்று பதிவிட்டிருந்தார்.

இதனை ஒட்டியே எச்.ராஜா கமல், இந்து அடையாளத்தை அழிக்க நினைப்பதாக சாடியிருக்கிறார்.

நாளை (மே 19) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இந்திய அளவில் கொளுந்துவிட்டு எரிந்தது கமலின் பேச்சு. அரவக்குறிச்சியில் அவர் ஆரம்பித்தது பிரதமரை பதிலளிக்க வைத்து, வட இந்திய அரசியல் பிரமுகர்களையும் கொந்தளிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x