Published : 05 May 2019 01:12 PM
Last Updated : 05 May 2019 01:12 PM

டான்செட்  நுழைவுத் தேர்வுக்கு மே 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான 'டான்செட்' (TANCET) நுழைவுத் தேர்வுக்கு மே 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான 'டான்செட்' பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.  அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் சேருவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு (டான்செட்), இதர கல்லூரிகளில் சேர இன்னொரு நுழைவுத் தேர்வு (AUCET) என 2 நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு தனித்தனி நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் வழக்கம் போல் ‘டான்செட்’ என்ற ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படாது’’ என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  டான்செட் (TANCET) நுழைவுத் தேர்வுக்கு மே 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

'டான்செட்' என்பது என்ன?

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு 'டான்செட்' (Tamilnadu Common Entrance Test) என்ற பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம். 'டான்செட்' நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.

டான்செட் நுழைவுத் தேர்வை எழுதப் பொறியியல், தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 45 சதவீத மதிப்பெண் போதும். எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்.சி.ஏ. பட்டதாரிகளும் இதற்கு விண் ணப்பிக்கலாம். எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டம் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பில் சேர கணிதப் பாடத்துடன் கூடிய இளங்கலைப் பட்டம் அவசியம். மேற்சொன்ன மதிப்பெண் விதிமுறை இவற்றுக்கும் பொருந்தும்.

https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x