Published : 03 May 2019 08:42 AM
Last Updated : 03 May 2019 08:42 AM

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் ஹவாலா பணம் பறிப்பு?- மாறுபட்ட தகவல்களால் இரு மாவட்ட போலீஸார் குழப்பம்

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் போலீஸார் போல் நடித்து பணம் பறிக்கப்பட்ட வழக்கை யார் விசாரிப்பது என்பதில் இருமாவட்ட போலீஸார் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் பறிக்கப்பட்டது ரூ.30 லட்சம் என புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3 கோடி என தகவல் பரவி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் தங்க வியாபாரி அன்வர். இவரது ஓட்டுநர் முகமது மற்றும் 2 பேர், கடந்த மாதம் 3-ம் தேதி இரவு சென்னையில் உள்ள வியாபாரி ஒருவரிடம் அன்வருக்குரிய தங்கத்தை கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு கேரளா நோக்கி காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 4-ம் தேதி அதிகாலை ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லை பகலாயூர் என்ற இடத்தில், 5 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது.

தங்களை போலீஸார் என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த கும்பல், காரில் சோதனை மேற்கொண்டு ஓட்டுநர் இருக்கை அருகே பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, காவல் நிலையம் வருமாறு கூறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் இரவு அன்வர் உள்ளிட்டோர் ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று, காரில் வந்த கும்பல் போலீஸார் எனக் கூறி ரூ.30 லட்சம் பணத்தை பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், அந்த பகுதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் எல்லைக்கு உட்பட்டது எனக் கூறி, பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, பெருந்துறை சென்று புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இவ்வழக்கில் துப்பு துலக்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால், எல்லைப் பிரச்சினையை காரணமாகக் கூறி இரு மாவட்ட போலீஸாரும் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸார் கூறும்போது, 'பகலாயூர் அருகே வீட்டுமனைக்கான இடத்தில் வைத்து, மர்ம கும்பல் ரூ.30 லட்சம் பணத்தை பறித்துச் சென்றதாக தெரிவித்தனர்.

தேர்தல் சோதனை நேரத்தில், எவ்வாறு அவ்வளவு பணம் எடுத்துவரப்பட்டது எனக் கேட்டபோது உரிய பதில் இல்லை. பெருந்துறை போலீஸார் அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்களைக் கேட்டபோது, உரிய பதில் தெரிவிக்கவில்லை. சென்னையில் யார் பணம் கொடுத்தார்கள் என்பதையும் தெரிவிக்கவில்லை. தற்போது இந்த விவகாரத்தில் ரூ.3 கோடி பறிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஒருமுறை புகார் அளிக்க வந்தவர்கள், அதற்குப் பிறகு வரவில்லை. பெருந்துறை காவல் நிலையத்துக்கு சென்றார்களா என்பதும் தெரியவில்லை. இதனால், பறிக்கப்பட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணைக்குப் பின்னரே, உண்மை நிலவரம் தெரிய வரும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x