Last Updated : 08 May, 2019 08:25 AM

 

Published : 08 May 2019 08:25 AM
Last Updated : 08 May 2019 08:25 AM

வரப்புயர நெல் உயரும்: நீடித்த வேளாண்மைக்கு திருந்திய நெல் சாகுபடி!

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த காலம் உண்டு. அந்த அளவுக்கு நெல் விளைச்சல் தமிழகத்தில் மிகுந்து இருந்தது. சோழநாடு சோறுடைத்து என்பார்கள். மூன்று போகமும் சோழநாட்டில் நெல் விளைந்ததுண்டு. இப்படி தமிழர்கள் வாழ்வில் பிரிக்க முடியாதது நெற்பயிர். எனினும், பல்வேறு காரணங்களால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், அதிக விளைச்சலுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் தமிழக விவசாயிகள். இவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெரிதும் உதவி வருகிறது.

நெல் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களான விதை, நீர் மற்றும் உரங்களைக் குறைந்த அளவு பயன்படுத்துதல், இளவயது நாற்றுகளை நடுதல், அதிக இடைவெளிவிட்டு நடுதல், களை கருவிகளைக் கொண்டு களையெடுத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றி அதிக விளைச்சல் பெறும் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம் என்கின்றனர் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

“திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய 2 முதல் 3 கிலோ தரமான விதைகள் போதுமானது. இம்முறையில் வழக்கமான நெல் நடவு முறையை விட, விதையின் அளவு குறைவாக இருந்தால் போதும். முதலில் விதைகளை 24 மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் 24 மணி நேரம் முளைக்கட்ட செய்ய வேண்டும்.

முளைக்கட்டிய விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்கள் மற்றும் எதிர் உயிர் பூஞ்சாணத்துடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர்,  நாற்றங்காலில் இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும்.

இதற்கு வயலில் 10 அடி நீளமும், 2.50 அடி அகலமும் கொண்ட மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். உயரம் 9-10 செ.மீ. வரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதைச் சுற்றிலும் கால்வாய்போல அமைத்துக் கொண்டு, தண்ணீர் பாய்ச்சலாம். நான்கு புறமும் இதே அளவில் 8 பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு இவை போதுமானது. தேவைக்கு ஏற்றவாறு பாத்திகளை அமைத்துக் கொள்ளலாம்.

விதைகளை இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். அதன்மேல் தென்னை ஓலை அல்லது வைக்கோல்போட்டு மூடிவிட வேண்டும். விதைகள் முளைக்கத் தொடங்கியவுடன், அவற்றை அகற்றி விடலாம். நாற்றங்காலுக்கு தினமும் இருவேளை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றங்கால் அமைத்தல்

நாற்றங்காலில் விதையை நெருக்கமாக தூவக்கூடாது. ஒரு விதைக்கும், மற்றொரு விதைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். ஒரு சதுரமீட்டருக்கு 50 கிராம் விதை போதுமானது. அப்போதுதான் நாற்றுகளை சேதமில்லாமல் எடுக்க முடியும்.

நிலத்தின் மேல் பகுதி மண் மிருதுவாக இருக்க வேண்டும். கற்கள், மண்ணாங்கட்டி மற்றும் களைகளை அகற்றிவிட வேண்டும். மண் கெட்டியாக உள்ள இடங்களில் மக்கிய எருவைத்  தூவிவிட வேண்டும். அப்போது அங்கு நாற்றுகள் நன்றாக வளரும். மண் நன்றாக உள்ள பகுதியிலும் எருவைத் தூவலாம். எக்காரணத்தைக்  கொண்டும் யூரியா போன்ற கரைசல்களை நாற்றங்காலில் தெளிக்கக்கூடாது.

நாற்று நடவு

8 முதல் 12 நாள் வயதுடைய நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும். 30 முதல் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நடுவதால், நாற்றுகள் தூர்கட்டும் பருவத்தை நாற்றங்காலிலேயே இழந்துவிடுகின்றன. வயதான  நாற்றுகளை பிடுங்கி நடும்போது,  வேர் பிடிப்பதற்கு காலதாமதம் ஏற்படும். இளவயது நாற்றுகளை நடுவதால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

நிலத்தை தயார் செய்தல்

இந்த முறையில் சாகுபடிக்கென்று பிரத்யேகமாக நிலத்தை தயார்

செய்ய தேவையில்லை. வழக்கமான முறையையே பின்பற்றலாம். அனைத்து பக்கத்திலும் நிலம் சமமாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அப்போதுதான், தண்ணீர் பாய்ச்சும்போது எல்லா பகுதிகளிலும் சமமாகப் பாயும். மேட்டுப் பகுதியில் பயிர்கள் காய்ந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

நல்ல வடிகால் வசதிக்கு, நிலத்தை சுற்றி, வாய்க்கால் வெட்ட வேண்டும். இதேபோல,  நிலத்திலும் 2-3 மீட்டர் நீள இடைவெளியில் ஒரு கால்வாய் எடுத்துவிட வேண்டியது அவசியம்.

பயிர் நடவு செய்தல்

வரிசைக்கு வரிசை, செடிக்கு செடி 25 செ.மீ. இடைவெளி விட்டு, ஒற்றை நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். அதிக இடைவெளி விட்டு நடுவதால், காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி பயிர்களுக்கு நடுவில் கிடைக்கும். இதனால்,  பயிர்களுக்கு  வேர்ப்பிடிக்கும் தன்மை, தூர்ப்பிடிக்கும் தன்மை மற்றும் தூர்கட்டும் திறன் அதிகரிக்கும். மண்ணிலிருந்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துகளும்  சமமாகக் கிடைக்கும்.

பின்னர், கோடு போடும் மார்க்கர் கருவியைக் கொண்டு, வயலில் கோடுகள் போட்டுக்கொள்ள வேண்டும். 8-12 நாள் வயதுடைய நாற்றுகளை கோடுகள் சந்திக்கும் இடங்களில் நடவு செய்ய வேண்டும். நாற்றுகளை 1-2 செ.மீ. ஆழத்துக்கு கீழ் வைக்கக்கூடாது. அதே நேரத்தில் வேர்கள் நீரில் மிதக்கும்படியோ அல்லது வெயில்படும்படியோ நடவு செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் பயிர்கள் சத்தை எடுத்துக் கொள்ளும் திறனும், அளவும் குறைந்துவிடும்.

 நீர் மேலாண்மை, களையெடுத்தல்...

நெற்பயிரின் தேவைக்கு ஏற்ப தண்ணீர்  பாய்ச்சினால் போதுமானது. களிமண் பாங்கான இடங்களில், சிறிது ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர், தட்டுப்பாடு உள்ள பகுதிகளில், தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சும் முறை மிகவும் ஏற்றது. விவசாயிகள் வயலை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், எத்தனை நாள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று முடிவெடுக்க முடியும். இது மண்ணுக்கு மண் மாறுபடும்.

இம்முறையில் நீர்ப்பாசனம் குறைவாக இருக்கும் என்பதால், களைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  களையெடுக்கும் ரோட்டோ வீடர், கோனோ வீடர் கருவிகளைக் கொண்டு களையெடுக்க வேண்டும்.

நாற்று நட்ட 10-12 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு 10 நாள் இடைவெளியிலும் களைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு பின்பற்றும் அனைத்து நடவடிக்கைகளுமே மண் வளத்தை அதிகப்படுத்தும் பணியைச் செய்கின்றன. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலிருந்து,  களைகளை மண்ணிலேயே போட்டு மடக்கி உழுதல் வரை அனைத்துமே மண் வளத்தை அதிகமாக்கும்.

இதனால் விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு. ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தாவர இலைகளில் இருந்து பெறும் கரைசலைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதிக விளைச்சல்!

இந்த சாகுபடி முறையில் அதிகமான விளைச்சல் கிடைப்பதுடன், தரமான, சுவைமிக்க அரிசி கிடைக்கும். இம்முறை அனைவராலும் எளிதாக பின்பற்றக்கூடியது என்பதால், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x