Last Updated : 18 May, 2019 08:51 AM

 

Published : 18 May 2019 08:51 AM
Last Updated : 18 May 2019 08:51 AM

அன்பை சொல்ல அழகான வழி!: `ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ எம்.கிருஷ்ணன் கடந்து வந்த பாதை

“ஓர் ஊதுபத்தியின் நறுமணம் வீடு முழுவதும் பரவும். எரிகின்ற சந்தன மரத்தின் நறுமணம் அந்தக் காடு முழுவதும் பரவும். காய்ச்சிய நெய்யின் நறுமணம் எவ்வளவு தூரம் பரவும்? என்று கேட்டால், சாப்பிடுகிறவருக்கும், பரிமாறுகிறவருக்கும்  இடையே பரவும் என்று பதில் வரலாம். ஆனால், கோயம்புத்தூரில் ஒரு சின்னக் கடையில் காய்ச்சிய நெய்யின் நறுமணம் கோவை, ஈரோடு, சேலம் வழியாக  சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வரை பரவி டெல்லி வரை பாய்ந்துள்ளது” என்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஊரின் எல்லையை உடைத்தெறிந்த சாதனையைப் பாராட்டினார் சொல்லின் செல்வர் சுகி.சிவம். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாபோல, கோவைக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘மைசூர் பா’  தனித்த அடையாளமாக மாறியிருக்கிறது.   வீழ்ச்சியில் கிடைத்த அவமானங்களையும், தோல்வியில் கற்ற அனுபவங்களையும் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.கிருஷ்ணன்.

தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு ஓர் இனிப்பு சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டியெழுப்பிய கதை, வியப்போடு,  நம்பிக்கையையும் சேர்த்தே அளிக்கிறது.

தாழ்வு மனப்பான்மை...

“ஒவ்வொரு வெற்றியாளருக்கும் கடந்த காலம் உண்டு. தோல்வியடைந்த ஒவ்வொருவருக்கும் எதிர்காலம் உண்டு என்று கூறுவார்கள். இன்று வெற்றியின் சிகரத்தில் அமர்ந்திருப்பவர்கள், தோல்வியின் அடிவாரத்தில் நிச்சயமாக இளைப்பாறி இருப்பார்கள். தோல்விகளை முதுகில் சுமந்தே நான் முன்னேறி இருக்கிறேன். நான் வீட்டில் மூத்த பையன். என்னைச் சுற்றி எல்லாம் இருந்தும், எனக்குள் எங்கிருந்துதான் அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை வந்தது என்றே தெரியவில்லை. வீட்டுக்கு  வருகிற உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் ‘மூத்த பையன் பரம சாதுவா இருக்கானே’என்று சொல்வார்கள். என்னுடைய தாழ்வு மனப்பான்மையை நான் வெற்றிகரமாக மறைத்துக்கொண்டதால், ‘சமத்துப் பையன்’ என்ற சான்றிதழை எல்லாரும் தந்தார்கள். `அசடு’  என்பதே அதற்கு உண்மையான அர்த்தம்.

அம்மாவின் அன்பும், கண்டிப்பும் கலந்த வளர்ப்பில், எவ்விதமான தீய பழக்கங்களுக்கும் போகவில்லை. பெயரெடுக்கும் பிள்ளை என்பதைவிட, பெயர் கெடுக்காத பிள்ளையாக இருக்க வேண்டுமென்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

நானும் அநியாயத்துக்கு சாதுவாக வளர்ந்தேன். மற்ற குழந்தைகள் துறுதுறுவென்று ஓடியாடி விளையாடும்போது, நான் அமைதியாக தள்ளிநின்று வேடிக்கைப் பார்ப்பேன். ஆடாமல், அசையாமல் இருக்கிற பொம்மையைப்போல அமைதியாக இருப்பேன். எனக்கென்று தனியாக எந்தக் கருத்தும் இருக்காது. உட்காரச் சொன்னால் உட்காருவேன். நிற்கச் சொன்னால் நிற்பேன். அதை யார் சொன்னாலும் கேட்பேன். படிப்பும் அவ்வளவாக ஏறாது. படிப்பும் இல்லாமல், சிந்தனையும் இல்லாமல் பையன் என்ன செய்யப்போகிறான் என்ற கவலை பெற்றோருக்கு வரத்தொடங்கியது. `எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் வரும் அப்பாவி எம்.ஜி.ஆர். போலவே என் இளம்வயது வாழ்க்கை கழிந்தது.

வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்!

யாரும் பிறக்கும்போதே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு பிறப்பது கிடையாது. வாழ்க்கை தினம் தினம் அனுபவங்கள் மூலம் ஏதாவது ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அதை கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், உறுதியாக முன்னேறலாம் என்பதே நான் கற்றுக் கொண்ட பாடம். இதை இவ்வளவு தெளிவாக சொல்கிற நான், வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற அனுபவப்  பாடங்களை ஆரம்பத்தில் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

எந்த அளவு நான் தாழ்வு மனப்பான்மையில் சிறைப்பட்டிருந்தேன் என்பதற்கு ஒரு உதாரணத்தை விளக்கினாலே போதும்.  எனக்குத்  திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.  கூட்டமாக நான்கைந்து பெண்கள் நின்று கொண்டிருக்கும்போது, ‘பொண்ணு வந்திருக்கு. பார்த்துக்கோப்பா’ என்று சொன்னார்கள். நான் தலைநிமிர்ந்து பார்த்த சில விநாடிகளில், கூட்டத்தில் யார் பெண் என்ற சந்தேகம் வந்தது. அதை வெளிப்படையாகக் கேட்டு தெரிந்துகொள்ள தைரியம் இல்லை.  `பொண்ணு பிடிச்சிருக்கா?’ என்று ஒரு உறவினர் குரல் உயர்த்திக் கேட்டதும், ‘பிடிச்சிருக்கு’ என்று தலையாட்டிவைத்தேன். திருமண நாள் வரை, நான் யாருடன் வாழப்போகிறேன் என்று தெரியாது. நினைவில் வந்துபோன நான்கைந்து பெண்களின் முகத்தில், இவராக இருக்குமோ? அவராக இருக்குமோ? என்று மனதுக்குள் ஒரு குழப்பம். ஆனாலும், வாய்திறந்து இதை யாரிடமும் சொன்னது கிடையாது. வாழ்வில் திருமணம்தான் முக்கியமான முடிவு. அதில்கூட நான் தெளிவாக இல்லை. அதிர்ஷ்டவசமாகவோ, கடவுளின் கருணையாலோ, இறைவன் கொடுத்த வரமாக அமைந்தது என் திருமணம். எந்த விஷயத்திலும் என் அணுகுமுறை இதுவாகவே இருந்தது. மனதில் சில விஷயம் தோன்றினாலும், அதை தைரியமாக வெளிப்படுத்தியது இல்லை.

கனவுகள் சூழ்ந்திருக்கும் இளமைப் பருவம் முழுவதும் நான் எவ்விதமான விழிப்புணர்வும் இல்லாமல் இருந்திருக்கிறேன். பி.காம். படித்துவிட்டு, மூன்று ஆண்டுகள் எந்த வேலையும் பார்க்காமல், வீட்டில் வெறுமனே இருந்தேன். சுறுசுறுப்பாக வேலைபார்த்து,  முன்னேற வேண்டிய வயதில், வீட்டைத் தாண்டி வெளியே வந்தது இல்லை.

தோளுக்கு மேல் வளர்ந்த பையன்  சும்மா இருந்தால், தண்டச்  சோறு என்று பெற்றோர்களே திட்டுவார்கள். உழைக்க வேண்டிய வயதில், சோம்பேறித்தனத்தை நண்பனாக ஏற்றுக்கொண்ட வாழ்வில், திடீரென ஒருநாள் எனக்கு ஞானம் பிறந்தது.  ‘எந்த வேலையும் செய்யாமல், சும்மா இருக்கிறோமே’ என்று கூச்சமாக உணர்ந்தேன்.

மாற்றம் தந்த ஏற்றம்!

புழுவாக இருந்த நிலையைக் கடந்து, திடீரென பட்டாம்பூச்சியாகி பறப்பதைப்போல எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. என்னைப் பற்றியும், என்னைச் சுற்றியும் அதிகமாக சிந்திக்கத் தொடங்கினேன். `நான் எப்படி இருக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியாமல் இருந்தது. ஆனால், ‘இப்படியே இருந்துவிடக் கூடாது’ என்ற தீர்மானத்துக்கு வந்தேன்.

தொழில் பற்றிய சிந்தனைகள் எனக்குள் முதன்முதலாக வரத்தொடங்கின. உழவுக்கும்,  தொழிலுக்கும் வந்தனம் செய்கிற கோவையில், ஒருத்தனுக்கு தொழில் பற்றிய சிந்தனை வந்துவிட்டால், திரும்பிய பக்கமெல்லாம் நம்பிக்கை நட்சத்திரங்கள் தென்படுவார்கள். சாதாரண நிலையிலிருந்து, வாழ்வில் உயர்ந்தவர்களை அதிகமாக கொங்குமண்டலத்தில் பார்க்க முடியும். தொழிலதிபர்களை, வாழ்வில் உயர்ந்தவர்களை, சாதனையாளர்களை  கவனிப்பது, தொழில் நடைபெறும் முறைகளை அறிந்து கொள்வது என எனக்குள் ஆர்வம் கனன்று எரியத்  தொடங்கியது. என்னுடைய முதல் காதலைப்போல அதை ரசித்தேன்.

பண்டிகைகள், வீட்டு விசேஷங்களுக்கு மட்டுமே  இனிப்பு பலகாரங்களின் தேவை இருந்தது. அதிலும், வீட்டில் இருக்கும் பெண்களே அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார்கள். கடைகளில் விற்கிற தின்பண்டங்கள் சுகாதாரமானதாகவும், சுவையானதாகவும் இருக்காது என்ற நினைப்பு மக்கள் மனதில் வெகுவாக இருந்தது.

மைசூர்பாகுவிலிருந்து `மைசூர் பா’

பத்திரிகைகளில் `மைசூர் பாகு’ இனிப்பை வைத்து நிறைய நகைச்சுவைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது.  மனைவிக்கு கணவன் மீது கோபம் வந்தால், கல் எடுத்து எறிவதுபோல, மைசூர் பாகு எடுத்து எறிவதாக, பிரசுரமான ஜோக்குகள் பிரபலமானவை. இத்தகைய சூழலில் ஸ்வீட் ஸ்டால் நடத்துவது என்பது, அன்றாட ஜீவனத்தை நடத்தப்  போதுமான அளவிலேயே இருந்தது. அதை வேலையாக செய்யலாமேதவிர, தொழிலாக செய்ய முடியாது என்பதே பொதுவான கருத்து. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் வேகமாக வளர்ந்தது.

வேலைக்கே போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒருவன், ‘நான் மாற்றிக் காட்டுவேன்’ என்று சொன்னால் மற்றவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். என்னைப் பார்த்தும் சிரித்தனர். வழக்கமாக ‘அதுவும் சரிதான்’ என்று அமைதியாக இருந்துவிடுகிற நான், உள்ளுக்குள் விழிப்புணர்வு வந்தபிறகு ‘செய்து காட்ட வேண்டும்’ என்று உறுதியுள்ளவனாக மாறினேன்.

தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். என்னுடைய அமைதியான இயல்பில், ஆற்றலை வீணடிக்காமல் முழுக்கவனமும் குவித்து,  ஒன்றை கவனிக்க முடிந்தது.

நகைக் கடைகள் நிறைந்த பகுதியில் எங்கள் வீடு இருந்தது. நெடிய சாலையின் இருபக்கமும் நகைக்கடைகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கூர்ந்து கவனிப்பது என் இளமையின் வழக்கங்களில் ஒன்று.  ஜூவல்லரிகளில் கண்ணாடி ஷோகேஸ்களில் நகைகளை வைத்து,  அதன் மீது ஒளிகுவியும்படி பளிச்சென்று பார்வைக்கு வைத்திருப்பார்கள். கடைக்குள் `சும்மாவாவது போய் பார்த்துவிட்டு வரலாம்’ என்ற எண்ணத்தை, அந்த நகைக் கடைகள் ஏற்படுத்தும்.

நகை போல அலங்காரம்...

தங்க நகைபோல, இனிப்பையும், பலகாரத்தையும் கண்ணாடி ஷோகேஸ்களில் வைத்து விற்பனை செய்யலாம் என்ற என் கருத்தை பெரியவர்களிடம் முன்வைத்தேன். தங்க நகையும், இனிப்பு பலகாரமும் ஒன்றா? என்று கூறி சிரித்தனர்.  தரமான தயாரிப்பில் சுவையான இனிப்பை, நகைபோல அலங்காரம் செய்து பார்வைக்கு வைத்தால், மக்கள் வாங்குவார்கள் என்று நம்பினேன்.

எங்களது தயாரிப்புகள் ஒரு மாறுதலாக இருக்கவேண்டும் என்பதற்காக, இனிப்புக்கு ‘மைசூர் பாகு’ என்று சொல்லாமல் ‘மைசூர் பா’ என்றே பெயர் வைத்தேன். பாகு என்று சொல்வதற்குள் நாவிலிருந்து கரைந்து,  தொண்டையில் இறங்கிவிட வேண்டும் என நினைத்தேன். நான் வித்தியாசமாக சிந்திப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியதும், என்னுடைய சிந்தனைகளுக்கு மதிப்பு உருவானது. என்னையும், நான் சொல்வதையும் சுற்றியிருந்தவர்கள் கவனிக்க ஆரம்பித்தனர். என் வாழ்வில் முதன்முதலாக வெற்றியின் ருசியை  அறிந்தேன். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாதவன், `எனக்கு இப்படித்தான் வேண்டும்’ என்று தீர்மானிப்பேன் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும்,  சிந்தனையில் மாற்றம் வந்த அளவுக்கு,  என்னிடம் செயலில் பெரிய மாற்றம் வரவில்லை. தொழிலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு சற்று மமதையைக் கொடுத்ததோ என்னவோ?

சில மணி நேரம் கடைக்கு வந்துபோகிற உழைப்பைத்தான் கொடுத்தேன். சிந்தனை செயலாக மாறவில்லை என்றால், கனவு நிஜமாக வாய்ப்பில்லை என்று அப்போது எனக்குப் புரியவில்லை. விளைவு, பரமபதத்தில் பாம்புக்கடி வாங்கிய கதையாக, ஆரம்பித்த கட்டத்துக்கு திரும்பி வந்தேன்.

கோட்டைவிட்ட கணக்குகள்...

இத்தனை கிலோ மைசூர் பாகு செய்ய, என்னென்ன மூலப் பொருட்கள் தேவைப்படும் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள எல்லா முயற்சிகளையும் எடுத்த நான், வரவு-செலவு கணக்குகளில் கோட்டைவிட்டேன். இவ்வளவு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால், எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதை அறியாமல் இருந்துவிட்டேன். தொழில் என்பது கணக்கு-வழக்கு சார்ந்தது என்ற அடிப்படை புரியத் தொடங்கியபோது, நான் கடனாளியாக இருந்தேன். மொத்தமாக ஏமாந்த பிறகு எப்படி மீண்டு வருவது என்ற குழப்பத்தில், செல்ல வேண்டிய திசை தெரியாமல் இருந்தேன்.

ஏமாந்த பிறகே, வாழ்க்கை தெளிய வைத்தது,  புரியவைத்தது. கேட்டதெல்லாம் கிடைக்கும்வரை, நாம் எதையுமே கற்றுக்கொள்வதில்லை. ‘நீ கேட்டது எதுவுமே உனக்கு இல்லை’ என்ற சூழல் வரும்போதுதான், விழிக்கவே செய்கிறோம். ஒருவனிடமிருந்து பணத்தை எளிதாகத் திருடிவிடலாம். ஆனால், படைப்பூக்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, காலையில் கடை திறப்பது முதல், இரவு கடை மூடும் வரை வேலை செய்ய பழக்கப்பட்டேன்.

தன்னம்பிக்கை என்பது உண்மையில் என்ன? நாம் எவரெவர் மீதோ, எவற்றின் மீதோ வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்ந்து நொறுங்கி துரோகமாக மாறும்போது, தனக்குள் இருந்து துளிர்விடுவதே தன்னம்பிக்கை. `எல்லோரையும் நம்பு, அதேநேரம் கவனமாயிரு’ எனும் நிர்வாகத்தின் முதன்மையான விதியை  கற்றேன். `நாம் வேலை செய்து ஜெயிப்பதற்குப் பதிலாக,  மற்றவர்களை வேலை செய்ய வைத்து ஜெயிக்கலாம் என்ற நினைப்பு நம்மைத்  தோற்கடித்துவிடும்’ என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். `எத்தனை பேர் வேலை செய்தாலும், நீ செய்ய வேண்டிய வேலையை இன்னொருத்தர் செய்ய முடியாது’ என்று உணரத் தொடங்கினாலும், பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.

கடன்காரர்கள் வந்து படியேறி கடனைக்  கேட்கும்போதுதான், பாதுகாப்பு இல்லாத  வாழ்வு பயமுறுத்தியது. அதற்குமுன்,  இன்னொருவருக்குப் பயந்து பதில் சொன்ன  அனுபவம் எனக்கு இருந்ததில்லை. கடன் பாக்கி எங்கே? என்று படியேறி சிலர் கேட்கும்போது, மனதளவில் பெரிய பாதிப்பை உருவாக்கியது. ‘கடனை எப்ப தரப் போறப்பா?’ என்று ஒருவர் கேட்க, ‘ஒரு வாரத்தில் கொடுத்துவிடுகிறேன்’ என்று நான் பதில் சொல்வேன். அடுத்த ஒரு வாரமும் எப்படி கடனைக் கொடுக்கப் போகிறோம்? என்று இதயம் படபடக்கும்.  படுத்தவுடன் எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் பழக்கப்பட்ட எனக்கு, இரவு படுத்தால் தூக்கம் வராது. கும்பகர்ணன் ஆறு மாதம் தூங்குவார் என்று  கேள்விப்பட்டிருந்தேன். நானோ வெளியுலகமே தெரியாமல், 25 வருடங்கள் தொடர்ந்து வாழ்க்கையில் தூங்கிக்கொண்டே இருந்திருக்கேன் என்று  புரிந்தபோது,  எதுவுமே என் கையில் இல்லை. என்னிடம் ஒரு கடையும், கடனும் மட்டுமே மீதம் இருந்தது…

இடைவேளை... நாளை வரை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x