Published : 11 May 2019 12:00 AM
Last Updated : 11 May 2019 12:00 AM

மனஉளைச்சல், நோய்களால் அவதிப்படும் போக்குவரத்து தொழிலாளர்கள்; பணியின்போதே ஆண்டுதோறும் நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் பரிதாபம்: பணிமனைகளில் மருத்துவ மையம் தொடங்க கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் சுமார் 60 சதவீதம் பேர் அவதிப்படுகின்றனர். இதனால், பணியின்போதே ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பிரிவுகளில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார்3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 பேர்வரை ஓய்வு பெறுகின்றனர். ஆனால், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப புதிய ஆட்களை நியமிப்பதில்லை என தொழிற்சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

8 மணிநேரப் பணி என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான நாட்களின் பணி நேரம் 14 மணி நேரத்தையும் தாண்டி விடுகிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடைவெயிலில் பேருந்துகளை இயக்குவது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதல் சுமையாகி விட்டது. 50 வயதுக்கு மேல் நோயால் அவதிப்படும் தொழிலாளர்களில் சிலர் பணியின்போதே இறந்துவிடுகின்றனர். இப்படி ஆண்டுக்கு100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் (மேற்கு) பணிமனையில் இருந்து நேற்று காலை பணிக்கு வந்த ஓட்டுநர் உமாபதிக்கு(53) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே அமர்ந்தார். இதைக்கண்ட ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி ஆய்வு அறிக்கை

‘‘பணி பளுவால் ஓட்டுநர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து 16 மணிநேரம் வரைகூட உழைக்கின்றனர். இதனால் பெரும்பாலான ஓட்டுநர்கள் மூட்டு வலி மற்றும்மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், முதுகுவலி, கண்பார்வை குறைபாடு, தொடை வலியும் ஓட்டுநர்களிடம் பரவலாக ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு போதிய அளவு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்’’ என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து துறைக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்கள் வேதனை

இதுதொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர்கூறும்போது, ‘‘காலிப் பணியிடங்களை நிரப்பாததால் நாளுக்குநாள் எங்களின் பணிப் பளு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தக் கோடைவெயிலில் ஒரு ஷிப்ட் பணியை முடிக்கவே கஷ்டமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான நாட்களில் நாங்கள் தொடர்ந்து 2 ஷிப்ட் பார்க்க வேண்டியுள்ளது. பணியை முடித்து வீட்டுக்குச் செல்லும்போது உடல் வலியாலும்,மனச்சோர்வாலும் அவதிக்குள்ளாகிறோம். எங்களை நம்பி குடும்பம்இருப்பதால், இந்தப் பணியை விட்டுவேறொரு பணிக்கும் மாற முடியவில்லை.

போதிய ஓய்வில்லாததால், தொடர்ந்து நோயால் அவதிப்படும் தொழிலாளர்களில் சிலர் திடீரென பணியின்போது இறந்து விடுகின்றனர்’’ என்றனர்.

தொழிற்சங்க நிர்வாகி கே.அன்பழகன் கூறுகையில், ‘‘அரசு பேருந்துகளுக்கான மொத்த இயக்க நேரம், எத்தனை ‘டிரிப்’ செல்வது, ஒரு ‘டிரிப்’ இடைவெளி என கடந்த 1972-ம் ஆண்டு வேலை முறை உருவாக்கப்பட்து. தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து விட்டன.

ஆனால், பேருந்து இயக்க நேரத்தை மட்டும் இன்னும் மாற்றியமைக்கவில்லை. இதனால், குறித்த நேரத்துக்குள் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பேருந்தை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது, ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் கூடுதல் படபடப்பை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

60 சதவீத தொழிலாளர்கள் அவதிதொமுச பொருளாளர் கி.நட ராஜன் கூறுகையில், ‘‘தொடர் பணியால் ஓய்வு இன்றி போக்குவரத்து தொழிலாளர்கள் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிமனைகளிலும் போதிய அளவில் ஓய்வு அறைகள் இல்லை. இதனால், நாளடைவில் 50 வயதுக்கு மேல் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், முகுதுவலி, மூல நோய் என பல்வேறு நோய்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களில் சுமார் 60 சதவீதம் பேர் ஏதாவது ஒரு நோயால் அவதிப்படுகின்றனர். நிர்வாகம் வழங்கியுள்ள காப்பீடு வசதியால் அறுவை சிகிச்சை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. எனவே, தொழிலாளர்கள் சாதாரண மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரை பெறும் வகையில் போக்குவரத்து பணிமனைகளிலேயே மருத்துவ வசதி மையங்களைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

நிர்வாகம் சொல்வது என்ன?

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் குறைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில பணிமனைகளை ஒருங்கிணைத்து மருத்துவ வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், உடலை சீராகவைத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். போக்குவரத்து ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைபெற காப்பீடு வசதி இருக்கிறது. பணிமனைகள்தோறும் மருத்துவ வசதி கொண்டு வருவது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x