Published : 27 May 2019 06:22 PM
Last Updated : 27 May 2019 06:22 PM

மக்களவைத் தேர்தல்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக முதலிடம்: வென்ற டிடிவி மூன்றாம் இடம்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதலிடம் பெற்ற டிடிவி தினகரன் மக்களவைத் தேர்தலில் அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளார். டெபாசிட் இழந்த திமுக முதலிடத்துக்கு வந்துள்ளது.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரண்டாகப் பிரிந்த அதிமுகவில் இபிஎஸ் அணியின் சார்பில் தொப்பிச் சின்னத்தில் தினகரன் போட்டியிட்டார். ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டியிட்டார். ஆனால் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்தன.டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. டிடிவி தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.

திமுக, அதிமுக, டிடிவி என மும்முனைப்போட்டியில் டிடிவி தினகரன் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தது. அதன் பின்னர் தமது அணிதான் உண்மையான அதிமுக என தினகரன் கூறிவந்தார்.

திமுக டெபாசிட் வாங்காததை தினகரன் கிண்டலடித்து வந்தார்.  அடிக்கடி ஆர்.கே.நகரை மேற்கோள் காட்டும் டிடிவி தினகரன் அதேபோன்ற வெற்றி தமிழகம் முழுக்க அமமுக பெறும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவில் திமுக 4 லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வடசென்னை தொகுதியைக் கைப்பற்றியது.

வடசென்னை மக்களவைத் தொகுதிக்குள் அடங்கிய  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்ற டிடிவி தினகரன் அணி, இம்முறை மக்களவைத் தேர்தலில் அத்தொகுதியில் பெற்ற வாக்குகள் வெறும் 10 ஆயிரத்து 551 மட்டுமே.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக ஆர்.கே.நகர் தொகுதியில் இம்முறை பெற்றது 1 லட்சத்து 3 ஆயிரத்து 227. அதிமுக கூட்டணி பெற்றது 21 ஆயிரத்து 920 மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x