Published : 28 May 2019 08:19 PM
Last Updated : 28 May 2019 08:19 PM

கோவையில் பயங்கரம்; பாஜகவுக்குத் தாவிய அண்ணன் மகன்: ஆத்திரத்தில் கொலை செய்த சித்தப்பா குடும்பத்துடன் சரண்

கோவையில் மாநிலக் கட்சி ஒன்றின் நிர்வாகியாக இருந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்ததால் ஆத்திரமடைந்த அவரது சித்தப்பா மற்றும் குடும்பத்தினர் அவரைக் கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மாநிலக் கட்சி ஒன்றில் நிர்வாகியாக இருந்தார். பின்னர் அவரது அண்ணன் மகன் சந்தோஷ் குமாரை அந்தக் கட்சியில் சேர்த்துவிட்டார். அவர் சில ஆண்டுகளில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளராகத்  தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன் தான் மாநில நிர்வாகியாக இருக்கும் கட்சியில் இருந்து விலகிய சந்தோஷ் குமார், பாஜகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். தனது அண்ணன் மகன் கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்துவிட்டு திடீரென பாஜகவில் இணைந்தது சித்தப்பா விஜயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சந்தோஷ் குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், அவரது மனைவி மது, மகன் கர்ணபிரசாத், அந்தக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் சந்தோஷ் குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது அரசியல் மோதலாக இது வெடித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து 3 நாட்கள் கடந்த நிலையில் கடந்த 26-ம் தேதி சந்தோஷ் குமார் வீரகேரளம் நகராட்சி அலுவலகம் அருகே  மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை, விஜயகுமார் தலைமையிலான கும்பல் மடக்கி  கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

சந்தோஷ் குமார் கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைப்போலீஸார் தேடி வந்தனர். போலீஸாருக்கு விஜயகுமார் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கொலையான சந்தோஷ் குமாரின் சித்தப்பா விஜயகுமார், சித்தி மது, அவர்களது மகன் கர்ணபிரசாத் மற்றும் ரமேஷ்  ஆகிய 4 பேர் சரணடைந்தனர்.

அவர்கள் நால்வரையும் ஜூன் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கட்சிப் பிரச்சினையில் சொந்த அண்ணன் மகனையே கொலை செய்த தம்பி குடும்பத்தின் கொடூரச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x