Published : 05 May 2019 07:09 AM
Last Updated : 05 May 2019 07:09 AM

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட ரிசார்ட்டில் நள்ளிரவு நடன நிகழ்ச்சியில் மாணவர்கள் ரகளை: கேரளாவைச் சேர்ந்த 159 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் நள்ளிரவில் நடைபெற்ற மதுவிருந்தில், போதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 159 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்தசேத்துமடையில் தென்னந் தோப்புகளில் 10-க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள கணேஷ் என்பவர் தோட்டத்தில், உரிய அனுமதியின்றி ‘அக்ரி நெஸ்ட்’ என்னும் பெயரில் ரிசார்ட் ஒன்றை, கடந்த 3 ஆண்டுகளாக அவரது உறவினர் நடத்தி வந்துள்ளார்.

கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருச்சூர், கோட்டயம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இன்ஸ்டாகிராம், வெப்சைட்கள் மூலம் இணைந்து, அக்ரி நெஸ்ட் ரிசார்ட்டில், ‘டீஜே’ எனும் நள்ளிரவு நடன நிகழ்ச்சியை நடத்தவும், இதற்கு ரூ. 1200 நுழைவுக்கட்டணம் எனவும் தகவல் பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் 60-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் கார்களில் ரிசார்ட்டில் திரண்டுள்ளனர். நள்ளிரவில் மது, கஞ்சா, போதை மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, பெரிய ஸ்பீக்கர்களை ஒலிக்கவிட்டு நடனம் ஆடியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அடிதடி, கூச்சல்,குழப்பம் ஏற்பட்டதால், மாவட்ட எஸ்பி சுஜித்குமாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதை யடுத்து எஸ்பி தலைமையில், அந்த ரிசார்ட்டை அதிரடி விரைவுப்படையினர் சுற்றி வளைத்த னர். விடியவிடிய நடந்த சோதனையில் மது பாட்டில்கள், கஞ்சா, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, தோட்ட உரிமையாளர் கணேஷ், ரிசார்ட் மேலாளர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதையில் ரகளையில் ஈடுபட்டதாக, 159 மாணவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போதைப் பொருட்களுடன், மது விருந்து நடத்திய ரிசார்ட்க்கு, கோவை மாவட்டஆட்சியர் ராசாமணி உத்தரவின்பேரில், வட்டாட்சியர் வெங்கடாசலம் 'சீல்' வைத்தார். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மாணவர்களுக்கு கிடைத்தது குறித்து, போதை தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x