Published : 04 May 2019 04:26 PM
Last Updated : 04 May 2019 04:26 PM

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற ரீதியில் தமிழிசை பேசுகிறார்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழிசை சவுந்தரராஜன், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் பேசுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றின் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு கேட்ட நிதியை பாஜக அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தோம்.

இதற்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாத தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டாரா? நிவாரணத் தொகை வழங்கினாரா ? என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் பதில் பேசியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் 2011-ல் தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட செய்தி வெளிவந்து 48 மணி நேரத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திப்பதற்காக வந்தார். கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் காடாம்புலியூரில் முந்திரி விவசாயிகளைச் சந்தித்ததோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அவரோடு பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் பார்வையிட்டேன்.

பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உடனடியாக கடன் வழங்குவதற்கு வங்கிகளின் தலைமை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே வரவழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியவர் அன்றைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.

அதேபோல, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பாக ஆயிரக்கணக்கான உயர்ரக முந்திரிக் கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் எந்தப் பகுதியில் இயற்கை சீற்றத்தினால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை உடனடியாக பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பார்வையிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், சமீபத்தில் கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அனைத்தும் நாசமாகி மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்தப் புயல் காரணமாக 63 பேர் உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடாதது ஏன் ? புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி கூட பிரதமர் வெளியிடாதது ஏன் ?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகை 14 ஆயிரத்து 100 கோடி ரூபாய். இதில் நரேந்திர மோடி அரசு எவ்வளவு தொகை வழங்கியது என்பதை தமிழிசையால் சொல்ல முடியுமா? இத்தகைய வஞ்சகப் போக்கு காரணமாகத் தான் மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை வீசுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் வழங்க ஐந்து தவணைகளில் தமிழக அரசு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி நிவாரணத் தொகை கேட்டது.

ஆனால், நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியதோ வெறும் ரூபாய் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மட்டுமே. நரேந்திர மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் ஆக, 50 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிற அதிமுகவினால் தமிழகத்தின் உரிமைகள் மத்திய பாஜக அரசால் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. மடியில் கனம் இருப்பதால் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை. இதனால் நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகள் பல்வேறு வகைகளில் பறிக்கப்பட்டு மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியாவிலேயே மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாத ஒரு மாநிலம் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழகம் தான். அதற்கு காரணம் பாஜகவின் இத்தகைய வஞ்சகப் போக்குகள் தான். இதனால் தான் மக்களவைத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற இலக்கை நோக்கி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி நடைபோட்டு வருகிறது.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழிசை வாதங்களை முன்வைக்க வேண்டுமே தவிர, விதண்டாவாதங்களை முன்வைக்க வேண்டாம்", என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x