Published : 31 May 2019 09:36 AM
Last Updated : 31 May 2019 09:36 AM

பர்கூர் மலையில் வாண்டுகள் கொண்டாட்டம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து  30 கிலோமீட்டர் மலைப் பாதையில் பயணித்தால் தாமரைக்கரை  வரவேற்கிறது. அங்கிருந்து கொங்காடை மலைக் கிராமத்துக்கு ஆசிரியர்  நித்தியானந்தனுடன், கரடுமுரடான, யானைகள் அதிகம் நடமாடும் பாதையில் 35 கிலோமீட்டர் பயணித்தோம்.

‘இந்த இடத்திலே போன வாரம் யானை நின்னது... கரடி அடிச்சு ஒருத்தரு காயமாயிட்டாரு’ என பழைய கதைகளை சொல்லி பயமுறுத்தியிருந்தார்கள். அதேபோல, திடீரென ஒற்றை காட்டு யானை வந்தால், எப்படி தப்பிப்பது என ஆலோசனையும் கூறியிருந்தார்கள். இதனால், கொஞ்சம் பயத்துடனேயே ஒரு மலையில் இருந்து இறங்கி, இன்னொரு மலையில் ஏறி, அதன் சரிவில் இறங்கி, மீண்டும் ஏறியபோது, கொங்காடை  மலைக் கிராமம்  வரவேற்றது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி, பர்கூர், கடம்பூர் வனப் பகுதிகளில் உள்ள குழந்தைத்  தொழிலாளர்களுக்கு கல்வி வழங்கும் வகையில்,  சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவனம்  7 சிறப்புப் பள்ளிகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான, பள்ளி செல்லாத, பள்ளிக்குச் சென்று பாதியில் படிப்பை நிறுத்திய 250 குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் 4 பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளை, பர்கூர் வனப் பகுதியில் உள்ள கொங்காடை எனும் வன கிராமத்தில் ஒன்றுகூடவைத்து, நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது ‘வாண்டுகள் கொண்டாட்டம்’ நிகழ்ச்சி.

பொம்மை செய்த மழலைகள்...

“நண்பா... எல்லோரும் இங்க வாங்க...”  60 வயதைக் கடந்த தாமரைச்செல்வன் குரல் கொடுக்கவும், அவரைச் சுற்றிக் கூடுகிறது மழலையர் பட்டாளம். “இப்ப கதை சொல்லலாமா... பாட்டு படிக்கலாமா... பொம்மை செய்யலாமா... சொல்லுங்க நண்பா” என்றதும், “பொம்மை செய்யலாம் நண்பா”  என்று கோரஸ்  எழுகிறது. வண்ண, வண்ண தாள்களை தாமரைச்செல்வன் எடுத்துக் கொடுக்க, குழந்தைகளின் கைவண்ணத்தில் அவை பட்டுப்பூச்சிகளாக, முயல்களாக, யானைகளாக மாறுகின்றன.

பெரிய பாறையின் மேல் அமர்ந்திருந்த அந்த குதூகலக் கூட்டத்தில், “நண்பா... என்னோட முயல் எப்படி இருக்கு...” என ஒவ்வொரு குழந்தையும் தன் படைப்பைக் காட்டி, பாராட்டு வாங்கி, மகிழ்ச்சியில் திளைக்கிறது. இந்தக்  கூட்டத்தில், ‘நண்பா’ என்ற சொல்லைத்தாண்டி,  யாரும், யார் பெயரையும் உச்சரிக்கக் கூடாது என்பது தோழமையை வளர்க்க விதிக்கப்பட்ட விதி. களிமண் குவியல், வண்ணப்பொடிகளால் உருவாக்கப்பட்ட சாயம், நினைத்ததை ஓவியமாக வரைய வெள்ளை அட்டைகள், வண்ணங்களை எடுத்து ஓவியம் தீட்ட வசதியாய் ‘பட்ஸ்’ துண்டுகள் என அந்தப் பகுதியே

வண்ணமயமாய் இருக்க,  வாண்டுகளின் திறமைகளை பார்த்து சொக்கிப்போய் நிற்கின்றனர் எழில் தலைமையிலான `களிமண் விரல்கள்’ குழுவினர்.

‘பிளாஸ்டர் ஆப் பாரிஸில்’ தீட்டப்பட்ட வண்ணக் கலவை, யானை, குதிரை, குல தெய்வம், தங்களை நகரங்களுக்கு அழைத்துச்  செல்லும் டிரக், வேன் என பலவகை உருவங்களாய் பரிணாமித்தன. தங்கள் படைப்புகளை அழகுபடுத்திக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு அமைதியாய் அடைக்கலம் தந்து பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தது பிரம்மாண்ட ஆலமரம்.

இசையும்... நடனமும்...

“ஸ்டார்ட் மியூசிக்” என்று சொன்னவுடன்,  மத்தளமும், மற்றொரு வாத்தியமும் பட்டையைக் கிளப்ப, ஆண், பெண் வித்தியாசமின்றி வரிசைகட்டி நின்ற குழந்தைகள், மதுரை திலகராஜ் ஒயிலாட்டத்தை ஒவ்வொரு படியாக ஆடினர். நிதானமாகத் தொடங்கிய ஆட்டம், கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்க, வேடிக்கைப் பார்த்த குழந்தைகளும், ஆட்டத்தில் தங்களை இணைத்து, உற்சாகம் கொப்பளிக்க, குதூகலத்துடன் நடனமாடினர்.சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி உருவாக்கிய கலைஞர்களான எழில், ராகேஷ், மதுரை பழனிகுமார் மற்றும் புகைப்படக் கலைஞர் புதுகை செல்வா  உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், கொங்காடை கிராமத்தில் முகாமிட்டு, வாண்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் பணியில் நான்கு நாட்களும் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேசியபோது, “இந்தக்  குழந்தைகள் எல்லையற்ற கற்பனைத்  திறனுடனும், படைப்புத் திறனுடனும் இருப்பதை உணர்கிறோம். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் குழந்தைகளின் கைவிரல் அச்சுகளை பதிய வைத்து, அதில் வர்ணம் தீட்டச்  சொன்னோம். அவர்களின் வண்ணமயமான எண்ணங்கள் அதில் பிரதிபலித்தன. அதேபோல, களிமண் மூலம் பொம்மைகளை செய்யவைத்து,  வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் என பலவாய்ப்புகளில் அவர்களின் தனித் திறமைகள் பளிச்சிட்டன. நகரப் பகுதியில் உள்ள குழந்தைகள் செல்போன், டிவி, லேப்டாப் என, அன்றாடம் தாங்கள் பார்க்கும் பொருட்களை உருவமாக மாற்றுவதை பல்வேறு முகாம்களில் பார்த்துள்ளோம். ஆனால், இந்தக் குழந்தைகள்,  தாங்கள் அன்றாடம் பார்த்த இயற்கையின் வடிவங்களை உள்வாங்கி, அவற்றை தங்கள் படைப்புகளாக காட்டி வியக்க வைத்தனர்” என்றனர்.

இவற்றுடன், `ஒரிகாமி’ முறையில் காகித பொம்மைகள் செய்தல், தென்னை மற்றும் பனை ஓலைகளில் பொம்மை செய்தல், புகைப்படக் கலை,  ஆட்டக்கலை, நாடகம், பாட்டு, சிலம்பம், ஒயிலாட்டம், கதை சொல்லல், ஆவணப் படம் திரையிடல் என கொண்டாட்டத்தின் உச்சத்துக்கு குழந்தைகளை கொண்டுசெல்லும் வகையில் நான்கு நாட்களும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நிறைவு நாளன்று ஈரோட்டிலிருந்து வந்த குழந்தைகளின் கதை சொல்லி வனிதா மணி, உடல்மொழியோடு ஒன்றிச்சொன்ன ஆட்டுக் குட்டி கதை வாண்டுகளைச் சொக்கவைத்தது.

இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியில், சாரல் மழை, குளிர் காற்றுக்கு இடையே நடந்த இந்த வாண்டுகளின் கொண்டாட்டம், கடந்து போன, நாம் மறந்து போன பால்யகாலக் கனவுகளை ஞாபகப்படுத்தியது என்றால் மிகையில்லை!

படைப்பாற்றலை வெளிக்கொணர்கிறோம்...

சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் செ.சி. நடராஜன் கூறும்போது, “குழந்தைகளின் தனித் திறமைகளை, படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரவும், அவர்களுக்கு பாரம்பரியக் கலைகளைக் கற்பித்து, அவற்றை உயிர்ப்பிக்கவும் இந்த முகாம் உதவுகிறது.

இந்த இயற்கை கொண்டாட்டம், கல்வி மீதான ஆர்வத்தை தூண்டச் செய்கிறது. பல்வேறு காரணங்களால் இடைநின்ற குழந்தைகளை தொடந்து பள்ளிக்கு வரவைப்பதும், தக்கவைப்பதும் பெரிய சவாலாக உள்ளது. வனாந்தரத்தில் சுற்றித் திரிந்தகுழந்தைகளுக்கு வகுப்பறை என்பது ஒரு சிறை. எனவே, வகுப்பறையைத் தாண்டி, மாற்று யுக்திகளை யோசித்தோம். இதன் விளைவே பார்வைப் பயணம், நிலாப்பள்ளி, கானகப் பயணம், வாண்டுகள் கொண்டாட்டம் எனும் பெயரிலான கோடை முகாம்கள். ஆறாவது ஆண்டாக நடைபெற்றது இந்த முகாம். வாண்டுகளை மகிழ்விக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் இனியும் தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x