Published : 30 May 2019 11:23 AM
Last Updated : 30 May 2019 11:23 AM

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது உறுதியாகி விட்டது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகிவிட்டது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?

அதனை அதிமுக தான் சொல்லும். மற்றவர்களின் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. எங்களுக்கு பாஜக அமைச்சரவையில் இடம் கொடுத்தால் அதனை ஏற்கலாமா, வேண்டாமா என்பதை அதிமுக தான் முடிவு செய்யும்.

அமைச்சரவையில் இடம்பெற அதிமுகவுக்குள் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறதே?

எல்லாம் கற்பனைகள். எங்களுக்கு பதவி இரண்டாம்பட்சம் தான்.

ஸ்டாலின் ஜெகன் மொகன் ரெட்டி பதவியேற்பு விழாவுக்கு செல்கிறாரே?

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகிவிட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், காட்சி மாறியவுடன் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறார். இதனை பரந்த மனப்பான்மை என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், மத்திய அமைச்சரவை பதவியேற்புக்கு அழைப்பு விடுத்த நிலையில் அங்கு கலந்துகொள்வது தான் நியாயம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பங்கேற்க வேண்டும். மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதே. நேரத்திற்கு தகுந்தாற்போன்று, ஆதாயம் தேடும் கட்சி திமுக.

மோடி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளதே?

அவரை பொறுத்தவரை பதவி கொடுத்தால் சர்வீஸ் செய்வேன் என்கிறார். இப்படி ஒருவர் இருக்கிறாரே என்பது வருத்தத்திற்குரியது. அவரை வைக்க வேண்டிய இடத்தில் மக்கள் வைத்திருக்கின்றனர். அதேபோன்று, தினகரன் தன்னை நாயகனாக சித்தரிக்க எவ்வளவோ கோடி செலவு செய்தார். இப்போது ஜீரோவாகி விட்டார். 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கு பூஜ்ஜியம் வாக்கு பதிவாகியுள்ளது.

தோல்விக்கான காரணங்கள் குறித்து அதிமுக ஆய்வு செய்கிறதா?

எல்லாவற்றையும் கட்சி கவனத்தில் எடுத்திருக்கிறது. அவற்றை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் என வைகோ கூறியுள்ளாரே?

பொறுத்திருந்து பாருங்கள். இரண்டு ஆண்டுகளில் எங்களின் காட்சியை திமுக பார்க்கும்.

நதிநீர் இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியுள்ளார். இது சாத்தியமானதா?

சாத்தியமனாது தான், வரவேற்கக்கூடியது.

கிருஷ்ணசாமி பத்திரிகையாளரை பார்த்து என்ன சாதி என கேட்டுள்ளாரே?

என்னை பொறுத்தவரி பெண் சாதி, ஆண் சாதி என இரண்டு சாதிகள் தான் இருக்கின்றன. சாதி ரீதியாக அந்த கேள்வியைக் கேட்டிருந்தால் தவறு.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x