Published : 14 May 2019 02:13 PM
Last Updated : 14 May 2019 02:13 PM

கமல்ஹாசனின் நாக்கை அறுக்கச்சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்து தமக்கு ஏற்புடையதல்ல. ஆனால், அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வன்முறைப் பேச்சு அதிமுக சங்பரிவாரக் கட்சியாக மாறி வருவதற்கு சான்றாக உள்ளது என திருமாவளவன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டஅறிக்கையில், ''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வன்முறைப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப்பேரனாக நான் நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் ‘ என்று பேசியிருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி மட்டும் அல்ல. அவர் ஒரு பயங்கரவாதி. அவரது நோக்கம் காந்தியடிகளைக் கொலை செய்வது மட்டுமல்ல.  இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி அவர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்பதுதான். எனவே கோட்சேவை  தீவிரவாதி என்பதை விடவும் பயங்கரவாதி என்று சொல்வதே பொருத்தமானது.

இந்த உண்மையைப் பேசிய கமல்ஹாசனைப் பாராட்டுகிறோம். ஆனால், தேர்தல் பரப்புரையின் போது மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது  ஏற்புடையதல்ல. அவர் இந்து என்று குறிப்பிட்டிருக்கவேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு. 

கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ கண்டனம் தெரிவிக்கவோ  எவருக்கும் உரிமை உண்டு. அமைச்சருக்கு கமல்ஹாசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதைக் கண்டிக்கலாம். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கலாம்.

ஆனால், அதையெல்லாம் விடுத்து கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். வட மாநிலங்களில் இதுவரை சங்கப் பரிவாரத்தினர் பேசி வந்த வெறுப்புப் பேச்சின் நீட்சியாக இருக்கிறது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு. அண்மைக்காலமாக அவர்  பேசுகிற பேச்சுகள் அவர் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்தவரோ என்று ஐயம்கொள்ள வைக்கின்றன.

அதிமுகவே கொஞ்சம் கொஞ்சமாக சங்கப் பரிவாரக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ராஜேந்திர பாலாஜியின் பேச்சு ஒரு சான்றாகும். அவரது வன்முறை பேச்சு கண்டனத்துக்குரியது மட்டுமல்ல தண்டனைக்குரியதாகும். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும்  என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இப்படி வன்முறையைத் தூண்டுகிறவரை  அமைச்சர் பதவியில் தொடரச் செய்வது நியாயம் அல்ல.  எனவே அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்'' என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x