Last Updated : 27 May, 2019 12:00 AM

 

Published : 27 May 2019 12:00 AM
Last Updated : 27 May 2019 12:00 AM

சதுப்பு நிலக்காடுகள், இனிமையான படகு சவாரி; சுற்றுலா பயணிகளை கவரும் காரங்காடு சூழல் சுற்றுலா

அழகான சதுப்புநிலக் காடுகள், இனிமை யான படகு சவாரி, கடல் வாழ் உயிரினங் களைக் காணும் வசதி என காரங்காடு சூழல் சுற்றுலா, அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

ராமநாதபுரம் வனச்சரகம் சார்பில், தொண்டி அருகே காரங்காடு மீனவக் கிராமத்தில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா அமைத்துள்ளது. காரங்காட்டில் 5 கி.மீ. தூரத்துக்கு 55 ஹெக்டேரில் சதுப்பு நிலக்காடு எனப்படும் அலையாத்தி காடுகள் பசுமையாக அமைந்துள்ளன. படகு சவாரி மற்றும் பல்வேறு பறவை யினங்களைக் கண்டு ரசிக்கலாம்.

இப்பகுதியை 2017-ம் ஆண்டு காரங்காடு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாவாக வனத்துறை அறிவித்தது. 2018 முதல் தனியார் படகுகள் மூலம் சென்று சதுப்பு நிலக்காடுகள், பவளப்பாறைகள், கடற்புற்கள் உள்ளிட்ட உயிரினங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி முதல் இங்கு வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய படகுகள் இயக்கப்படுகின்றன. தனியார் படகுகளையும் அனுமதிக்கின்றனர். சூழல் சுற்றுலா என்பதால் காரங்காடு மக்களைக் கொண்டு சுற்றுலா வளர்ச்சிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை சார்பில் குஜராத்தில் இருந்து 6 பைபர் துடுப்பு படகுகள் வாங்கப்பட்டன. இவை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

காரைக்குடியைச் சேர்ந்த பானு என்பவர் கூறும்போது, பிச்சாவரத்துக்கு அடுத்ததாக இங்கு அழகான சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. படகு சவாரி செய்யவும், கடல் அழகையும், பறவைகளையும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

சுற்றுலா கமிட்டித் தலைவர் ஜெரால்டு மேரி கூறியதாவது:

இங்கு சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்ட மக்கள் அதிகம் வருகின்றனர். காலை 10 முதல் மாலை 4 மணி வரை படகு சவாரி செய்யலாம். பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடலுக்கு அடியில் சென்று பவளப் பாறைகள், கடல்வாழ் உயிரினங்களை ரசிக்க (ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிரத்யேக உடையுடன்) ரூ.200 கட்டணம்.

வெளியூர்களில் இருந்து வருவோர் படகு சவாரி செய்யவும், கடல் உணவு வகைகளை உண்ணவும் முன்பதிவு செய்ய வேண்டும்.

இங்கு வந்த பின் முன்பதிவு செய்தால் தயிர் சாதம், வறுத்த மீன் வழங்கப்படும். ஆனால் நண்டு, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு காலையிலேயே முன்பதிவு செய்ய வேண்டும்.

கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து காரங்காடுக்கு வரும் இணைப்புச் சாலைகள் மோசமாக உள்ளன. சாலை, கழிவறை, குடிநீர் ஆகிய வசதிகளைச் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x