Published : 15 May 2019 02:20 PM
Last Updated : 15 May 2019 02:20 PM

தீவிரவாதத்துக்கு தங்கள் தலைவரைப் பலி கொடுத்த கட்சி, இப்போது அதற்கு உறுதுணையாகப் பேசுகிறது: காங்கிரஸை சாடிய தமிழிசை

தீவிரவாதத்திற்கு தங்கள் தலைவரைப் பலி கொடுத்த கட்சி, இப்போது அதற்கு உறுதுணையாகப் பேசுகிறது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

இந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது என, பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?

முதலில் கமல்ஹாசன் தான் பேசியது தவறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். திடீரென கமல்ஹாசனை இதற்காக கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி போன்றோர் கமல் பேசியதைக் கொண்டாடுகின்றனர். தீவிரவாதத்தை எந்த ரூபத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, ஒப்புக்கொள்ளக் கூடாது. தீவிரவாதம் பற்றிய பேச்சுக்கு இங்குள்ள சில அரசியல் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் ஆதரவு கொடுப்பதுதான் மிகுந்த கவலையைத் தருகிறது.

தீவிரவாதத்திற்கு தங்கள் தலைவரை ஒரு கட்சி பலி கொடுத்துவிட்டு, இப்போது தீவிரவாதத்திற்கு உறுதுணையாகப் பேசிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. இப்போது காந்தியின் மரணத்தைக் கிளறி அதனை இந்து தீவிரவாதம் என்று சொல்லும் அளவுக்கு கமலுக்கு யார் தைரியம் கொடுத்தது? இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேச வேண்டிய பேச்சு இல்லை இது.

கமலை யாராவது இயக்குகிறார்களா? அல்லது அவரே கத்துக்குட்டித் தனமாகப் பேசுகிறாரா?  அவரை யாரோ தூண்டுகிறார்கள். பிரதமரின் கருத்து சரியானது.

கமலின் பிரச்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. தானே தடை செய்துகொண்டார் என்பது யதார்த்தம்.

நடிகராக அவர் ஏற்கெனவே பிரபலமானவர். இப்போது தான் பிரபலமாக வேண்டிய தேவையில்லை. அவருடைய கருத்து தவறானது. அந்தக் கருத்தை கமல் திரும்பப் பெற வேண்டும்.

கமல்ஹாசன் சர்ச்சைக்கு திமுக கருத்து தெரிவிக்காததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் திமுக இதற்குக் கொடுக்கவில்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அப்போது, தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் யார் எனப் பார்க்கிறார்கள்? ஒரு கண்டனம் கூட தெரிவிக்கப் பயப்படுகிறார்கள். இதில் வாக்கு அரசியல் இருக்கிறது.

காங்கிரஸில் இணைய நீங்கள் விரும்புவதாக, செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறாரே?

இதற்கெல்லாம் நான் பதிலே சொல்ல மாட்டேன்.

நீங்கள் தோல்வி பயத்தில் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளாரே?

சந்திரசேகர ராவைப் பார்த்துவிட்டு நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை. அவருக்குப் பல முகங்கள் உள்ளன. நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். அதனால், தான் அவர்களைப் போன்றவர்கள் தூது விடுகிறார்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x