Published : 29 May 2019 09:11 AM
Last Updated : 29 May 2019 09:11 AM

மூச்சுள்ள வரைக்கும் போராடணுமுங்க... கொங்கு விவசாயி தீத்திபாளையம் பெரியசாமி!

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி, சோம்பல் இல்லாம ஏர் நடத்தி, கம்மா கரையை ஒசத்தி  கட்டி, கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பா பயிரை பறிச்சு நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு, நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு, அட காடு விளஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்...” பல ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் நிலையை விளக்கியது இந்த திரைப்படப் பாடல். “என்னிக்குமே விவசாயிங்க போராடிக்கிட்டுத்தானுங்க  இருக்கணும்.  பாடாதபாடு பட்டு செய்யும் வெள்ளாமை வீடு வந்தாலும், விலை போகறதுக்குள்ள உயிர்போகுதுங்க. சாகுற வரைக்கும் போராடிக்கிட்டே இருக்கணும்ங்கறது விவசாயிங்களோட தலையெழுத்து. இது என்னிக்கு மாறுமோ தெரியலை” என்கிறார் கொங்கு மண்ணின் விவசாயி தீத்திப்பாளையம் பெரியசாமி(46).

உலகில் நஷ்டம் வரும் என்று தெரிந்தே ஒரு தொழிலில் ஈடுபடுபவர்கள் விவசாயிகளாகத்தான் இருக்க முடியும். விவசாயத்திலும் நாளுக்கு நாள் நவீனத் தொழில்நுட்பங்கள் புகுந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் என்னமோ கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.  ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள்.

கொங்கு மண்டலத்தில் விவசாயமும், தொழிலும் கொடிகட்டிப் பறந்தாலும், தொழில் துறையின் வளர்ச்சியும், லாபமும் விவசாயிகளுக்கு கிடையாது. ஆனாலும், பிடிவாதமாய் விவசாயம் செய்வதுடன், தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமியும் அவர்களில் ஒருவர். கொளுத்தும் வெயில் நேரத்தில் அவரைத் தேடிச் சென்றோம்.

“அப்பா ரங்கசாமியும், அம்மா சரஸ்வதியும் எப்பவும் காட்டுவேலை செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளிக்கூடத்துல 5-வதும், கோயம்புத்தூர் டவுன்ஹால் சிஎஸ்ஐ பள்ளிக்கூடத்துல பத்தாவதும் முடிச்சிட்டு, வி.எல்.பி. பாலிடெக்னிக்குல டிப்ளமோ முடிச்சேன். சின்ன வயசுல வீட்டுல 30, 35 மாடுங்க இருக்கும். மாட்ட ஓட்டறது, தோட்ட வேலைனு சின்ன வயசுலேயே விவசாயம் கத்துக்கிட்டேன்.

டிப்ளமோ முடிச்சும்கூட வேலைக்குப்போக பிடிக்கலை. விவசாயத்துக்கு வந்துட்டேன். தக்காளி, கத்தரி, சின்னவெங்காயம்னு பயிர் செஞ்சோம். 1997-ல் திராட்சை தோட்டம் அமைக்க வங்கியில கடன் கொடுத்தாங்க. திராட்சை சாகுபடி பயனுள்ளதாக இருந்தது. 2000-ம் ஆண்டுகள்ல கடும் வறட்சி. தண்ணியும் உப்புத்தன்மை மிகுந்ததா மாறிடுச்சு. பெருமாள்கோயில் பகுதியில இருந்து பைப்லைன் போட்டு தண்ணி கொண்டுவந்து திராட்சையைக் காப்பாத்தினோம். கொஞ்ச காலத்துக்கு அப்புறம் திராட்சை சாகுபடியைக் கைவிட்டுட்டோம். அப்புறம் பந்தல்போட்டு பாகல், சுரை, புடலைனு சாகுபடி செஞ்சோம்.

விவசாயம் செய்யறதுல பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிறைய கோரிக்கைகளுக்காக அதிகாரிகளை சந்திச்சி, மனு கொடுத்தோம். ஏதாவது ஒரு அமைப்புல இருந்தா, நம்ம கோரிக்கையை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுபோகலாம்னு தீர்மானிச்சேன். ஆரம்பத்துல கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையிலும், அப்புறம் கொங்குநாடு முன்னேற்றக் கழக விவசாய அணியிலும் இருந்தேன்.

ஆலாந்துறையில இருந்த வட்டார துணை வேளாண் மையம் பூட்டியே கிடக்கும். சிலர் ஒண்ணுசேர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணிகிட்ட மனு கொடுத்தோம். அடுத்த நாளே அந்த மையத்தை திறந்துட்டாங்க. ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல நடக்குற குறைதீர் கூட்டத்துல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி, பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பாரு.  அவர்கிட்ட பேசும்போது, ‘நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்து, விவசாயிங்களுக்காக குரல் கொடுக்கலாம் பெரியசாமி’னு சொன்னாரு. அதுல இருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துல இணைந்து செயல்படறேன்.

இந்தியாவோட முதுகெலும்பே விவசாயம்னு சொல்றாங்க. ஆனா, அந்த விவசாயியோட நிலைமை ரொம்ப மோசம். நாட்டுல தினமும் ஏதாவது ஒரு பகுதியில விவசாயி தற்கொலை செய்துகிட்டுத்தான் இருக்காரு.

போதுமான மழையில்லை, வறட்சி, இல்லைனா வெள்ளம், பூச்சித் தாக்குதல், இடுபொருள் தட்டுப்பாடுனு பலமுனை தாக்குதல்களை சமாளிச்சி, மகசூல் எடுக்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுது. இதுல, யானை, காட்டுப்பன்றி, மயில்னு விலங்குகளும், பறவைகளும் சாகுபடி நிலத்துல புகுந்து, பயிர்களை அழிக்குது. எங்க வாழைத் தோட்டத்துல காட்டுப்பன்றிகளோட அட்டகாசம் தாங்க முடியலை.

இதையெல்லாம் மீறி வெள்ளாமை எடுத்த பின்னாடி, அதை விக்கறதுக்கும் பாடுபடறோம். சில நேரங்கள்ல விளை பொருளை வித்துக் கிடைக்கற தொகை, அறுவடை செலவைக்கூட ஈடு செய்யறதில்லை. எங்ககிட்ட பத்து ரூபாய்க்கு காய்கறி வாங்கினால், மூணு கை மாறி, மக்கள்கிட்ட 30, 35 ரூபாய்க்கு விக்கறாங்க. இடையில இருக்கறவங்களுக்குத்தான் லாபம்.

இதுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்துது. நான்கூட காளிங்கராயர் காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தோட செயலாளராக இருக்கேன். ஆனா, இதெல்லம் கொஞ்ச நாளைக்குத்தான். உழவர் சந்தை மாதிரி பல திட்டங்கள் இருந்தாலும், எல்லா விவசாயிக்கும் விலை கிடைக்கறதில்லை. ஒவ்வொரு காய்கறி, பழத்துக்கும் அரசாங்கமே உரிய விலை நிர்ணயிச்சு, அதை முழுமையாக அமல்படுத்தினால்தான் தீர்வு கிடைக்கும். விவசாய நிலங்களோட பரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சிக்கிட்டே வருது. வீரிய ரகம் போட்டு அதிக உற்பத்தி செய்யறதால, தப்பிச்சிக்கிட்டிருக்கோம்.

அதேபோல, ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையும் பெரிசா நிக்குது. நவீன இயந்திரங்கள், களைக்கொல்லினு நிறைய வந்தாலும், வேலையாட்கள் இல்லாதது பெரிய பிரச்சினைதான். மத்திய அரசாங்கத்தோட வேலை உறுதித் திட்டம், விவசாயப் பணிகளுக்கு ஆட்களே கிடைக்காமல் செஞ்சிடுச்சு. கேரளா மாநிலம் மாதிரி, இந்த திட்டத்தின் தொழிலாளர்களை, விவசாயப் பணிகளுக்கு முழுமையா ஈடுபடுத்தினால்தான், இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுகிடைக்கும்.

விவசாய நிலத்துல வன விலங்குகள் நுழையறதைத் தடுக்க, போதுமான நடவடிக்கை எடுக்கணும். அதேபோல, பயிர் சேதத்தால பாதிக்கப்படும் விவசாயிக்கு, உரிய இழப்பீடு கொடுக்கணும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தனிப்பட்ட ஒவ்வொரு விவசாயியும் பயனடையற வகையில மாத்தியமைக்கனும்.

இப்பல்லாம் முழு நேரமாக விவசாயம் செஞ்சா, வருமானமும் இல்லை, மரியாதையும் இல்லை. முழு நேர விவசாயிக்கு பொண்ணு கொடுக்கவே தயங்கறாங்க. அதனால, பகுதிநேரமாகத்தான் விவசாயம் செய்யணும்னு நிறைய பேர் நினைக்கறாங்க. ஏற்கெனவே, நிறைய பேர் விவசாயத்தைக் கைவிட்டுட்டுப் போயிட்டாங்க. அடுத்த தலைமுறையை விவசாயத்துக்கு வரவே கூடாதுனு சொல்றவங்கதான் அதிகம். இந்த நிலைமை மாறணும். உலகத்துக்கே சோறுபோடற விவசாயி, பட்டினி கெடக்கற நிலையை மாத்தணும். வயசான விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுக்கணும். மானியமும், கடனுதவியும் நேரடியாக விவசாயிக்கே கொடுக்கணும்.

கொங்கு மண்டலத்துல விவசாயம்தான் பிரதானமாக இருந்தது. ஆனால், இப்ப விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல்போய்க்கிட்டிருக்கு.  எங்களோட கோரிக்கைகளுக்காக போராடிக்கிட்டே இருக்க  வேண்டியிருக்கு. இதெல்லாம் மாறணும். விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக மாறினால்தான், இளைஞர்கள் விவசாயத்துக்கு மீண்டும் வருவாங்க. நம்ம ஆதிகுடி தொழில் மீண்டும் பழைய நிலைக்கு வரணும். விவசாயினு சொன்னா மரியாதையா பாக்கணும். அதுக்காக சாகுற வரைக்கும் போராடிக்கிட்டே இருப்போமுங்க” என்று கண்கலங்கி விடைகொடுத்தார் பெரியசாமி.

தீத்திப்பாளையத்திலிருந்து கிளம்பும்போது, “விவசாயி...விவசாயி... கடவுள் என்னும் முதலாளி! கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி...” என்ற மருதகாசியின் பாடல் தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x