Published : 03 May 2019 02:55 PM
Last Updated : 03 May 2019 02:55 PM

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தமிழகவேலைதமிழருக்கே: திருச்சி போராட்டத்தின் எதிரொலி

தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே என்ற இந்த இரண்டு ஹேஷ்டேகுகளும் இந்திய அளவிலும், சென்னை ட்ரெண்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதைக் கண்டித்து திருச்சி பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகவே ட்விட்டரில் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன. அண்மையில்கூட திருச்சி பொன்மலையில் ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் எனப்படும் பழகுநர் பணிக்காக நடந்த நேர்காணலில் 1765  பேரில் வெறும் 100 தமிழர்கள் என்றளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் வெற்றி பெற்ற 325 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை. அனைவருமே வடமாநிலத்தவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இதனைக் கண்டித்தே இன்றைய போராட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற இயக்கத் தலைவர் மணியரசன் பேசும்போது, "தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து இனப்பாகுபாடு. 18 மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிப்படுகின்றனர்.

பொன்மலை பணிமனையில் பழகுநராக சேர நேர்காணலுக்கு 1765 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 100 பேர் மட்டுமே தமிழர்கள். அதிலுன் தேர்வுக்குப் பின்னர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட 325 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. வட இந்தியர்கள், மலையாளிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இது திட்டமிட்டு தமிழர்களின் உரிமையைப் பறிப்பதுதாகும்.

இதுதான் இன ஒதுக்கல் கொள்கை. இதில் இனியும் அனுமதிக்க இயலாது. மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து போராட்டங்கள் வலுப்பெறும். இங்கே மறியல் போராட்டம் நடத்தினோம். இனி அடுத்ததாக சென்னையில் வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலங்களுக்கு வெளியே நின்று வடமாநிலத்தவர்களை கையைப் பிடித்து இழுத்து வேலைக்குச் செல்லவிடாமல் தடுப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே வேலை வழங்கும் சட்டம் இருப்பதை போல் தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.

 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x