Published : 04 May 2019 05:03 PM
Last Updated : 04 May 2019 05:03 PM

நாளை நீட் தேர்வு: மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பி பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாளை (மே 5) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

 

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் இத்தேர்வுக்கு, தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 154 நகரங்களில், இத்தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கரூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட 14 நகரங்களில், நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில், இத்தேர்வை எழுதலாம்.

 

இந்நிலையில் மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதுதொடர்பான வழிகாட்டுதல் இதோ:

 

என்ன செய்யவேண்டும்?

* வசிக்கும் ஊர் இல்லாமல் வேறு ஊர்களுக்கு தேர்வு எழுதச் செல்வதாக இருந்தால், அங்கு செல்ல போக்குவரத்து வசதிகள், பேருந்து, ரயில் கால நேரம் ஆகியவற்றைத் தெரிந்து முதல் நாளே மாணவர்கள் செல்ல வேண்டும்.

 

* தங்கும் இடத்திலிருந்து தேர்வு மையம் செல்லும் வழியை அறிந்திருக்க வேண்டும்.

 

* உதவிக்கு வருபவரிடம் முதல் நாள் தேர்வு மையம் சென்று வரச் சொல்ல வேண்டும்.

 

* ஒரு தேர்வு மையத்தில் பல அறைகள் இருக்கலாம். எந்த அறையில் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முதல் நாள் மாலை அல்லது தேர்வு அன்று காலையில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இயலாத சமயத்தில், தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாகச் சென்று இவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

 

* தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை. அதனால், 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று, அவரவர் இருக்கைகளில் அமர்வது நல்லது.

 

* ஒவ்வொருவருக்கும் ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவெண் ஒட்டப்பட்டு இருக்கும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும்.

 

* 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால் டிக்கெட் பரிசீலனை நடைபெறும். அப்போது மாணவர்கள் ஹால் டிக்கெட், போட்டோ ஐடியைத் தர வேண்டும்.

 

* ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 

* 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 மணி முதல் 2.00 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவுசெய்ய வேண்டும்.

 

* தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத்தாள் தொகுப்பில் முன் பக்கம் எத்தனை பக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அத்தனை பக்கங்கள் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். இல்லை என்றால், அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். வினாத்தாளில் உள்ள குறியீடும் விடைத் தாளில் உள்ள குறியீடும் ஒரே குறியீடுதான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

* 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது. வெளியேறும் முன், விடை பதியப்பட்ட ஓஎம்ஆர் தாளைக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

 

* வருகைப் பதிவுத் தாளில், மாணவர்கள் தங்கள் விரல் ரேகைகளைப் பதிய வேண்டும்.

 

* நீட் ஹால் டிக்கெட், விண்ணப்பத்தில் பதிவு செய்த புகைப்படத்தின் அதே நகல், செல்லத்தக்க போட்டோ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

 

* தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். சொந்தமாகப் பேனா கொண்டு செல்லக் கூடாது.

 

* ஜியோமெட்ரிக் பாக்ஸ், பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்டவைக்கு அனுமதி இல்லை.

 

* மொபைல் போன், புளூடூத், பென் ட்ரைவ், பேஜர், ஹெல்த் பேண்ட், கை கடிகாரம் ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது.

 

* கைப்பை, கேமரா, காதணிகள், வளையல்கள், ஆபரணங்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை.

 

* தலையில் கிளிப், மூக்குத்தி , காதுவளையம் அணியக் கூடாது.

 

* அதேபோல் சாப்பிடும் உணவுகள், வாட்டர் பாட்டில்களுக்கு மையத்தினுள் அனுமதி கிடையாது. (சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் வெளியில் தெரியும்படியான தண்ணீர் பாட்டில், பழங்கள், மாத்திரைக்கு அனுமதி உண்டு - முறையான முன் அனுமதிக்குப் பிறகு)

 

 

ஆடை கட்டுப்பாடு

 

* மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும்.

* அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது.

* அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக (12.30 pm)தேர்வு அறைக்கு வந்து, ஆசிரியைகளின் சோதனைக்கு உள்ளாக வேண்டும்.

* தேர்வு மையத்துக்குள்ளாக ஷூ அணியக் கூடாது. செருப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். அவையும் ஹை ஹீல்ஸ் உள்ளதாக இருக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x