Published : 13 May 2019 12:00 AM
Last Updated : 13 May 2019 12:00 AM

கழிவுநீரை குடிநீர் ஆதாரமாக மாற்றும் வாரியம்: சென்னையில் வறட்சி கால குடிநீர் தேவையை சமாளிக்க நடவடிக்கை

சென்னையில் கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிப்பதன் மூலம் வறட்சி காலத்தில் அதை முக்கிய குடிநீர் ஆதாரமாக மாற்ற குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், செங்குன்றம் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளாக கோடையில் வறண்டு கிடக்கின்றன. இதனால் சென்னை மாநகரில் நாளொன்றுக்கு தேவையான 830 மில்லியன் லிட்டர் குடிநீரை விநியோகிக்க முடியவில்லை. ஜூன் 1-ம் தேதி முதல் 500 மில்லியன் லிட்டராக இது குறையவுள்ளது.

சென்னையின் மொத்த நீர் தேவையில், 65 சதவீத தேவையை ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. வறட்சி காலத்தில் ஏரிகள் வறண்டு விடுவதால் மாற்று ஆதாரத்தை தேடவேண்டியுள்ளது. அதற்கு அதிக நிதியும் தேவைப்படுகிறது. அதனால், மாநகரில் தினமும் வெளியேறும் 950 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று, குடிநீர் வாரிய பொறியாளர்கள் சிலரும், முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் போன்ற வல்லுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கழிவுநீரை குடிநீர் ஆதாரமாக மாற்ற குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் வெளியேறும் கழிவுநீர், கழிவுநீரேற்றும் நிலையங்கள் மூலமாக கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி, நெசப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி முதல்நிலை, 2-ம் நிலை சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நீரை குடிநீராக பயன்படுத்த முடியாது. அவ்வாறு தற்போது நாளொன்றுக்கு 727 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் குடிநீர் வாரியத்திடம் உள்ளது. மேலும் 103 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் திருவொற்றியூர், சோழிங்கநல்லூரில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக 1993-ம் ஆண்டு முதல், கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் 30 மில்லியன் லிட்டர் நீர், மணலியில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கொடுங்கையூரில் மேலும் 45 மில்லியன் லிட்டர் சுத்திகரித்து மணலி தொழிற்பேட்டைக்கும், கோயம்பேட்டில் இருந்து 20 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு செய்து ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கும் குழாய்கள் மூலம் அனுப்பும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளன.

இதிலேயே 3-ம் நிலை சுத்திகரிப்பு மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் முறையில் (TTRO- Tertiary Treatment Reverse Osmosis) சுத்திகரிக்கும்போது, அந்த நீர் குடிக்க உகந்ததாக மாறுகிறது. இது மிகவும் சுத்தமானது. ஆனால் இந்திய கழிவுநீர் பயன்பாட்டுக் கொள்கையில், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதம், கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பூர்த்தியாகிறது. மீதமுள்ள தேவைக்கு மலேசிய நாட்டு நீர்நிலைகளில் இருந்து பெறப்படுகிறது.

நிரந்தர தீர்வு

சிங்கப்பூரின் உள்நாட்டு குடிநீர் ஆதாரம், பயன்பாடு போன்றவற்றுடன் சென்னை மாநகரம் பல விதங்களில் பொருத்தமாக உள்ளது. அதனால் இங்கும் கழிவுநீரை முக்கிய நீராதாரமாக மாற்றுவது காலத்தின் கட்டாயமாகிறது. கடந்த ஆண்டு மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டும் மழை வராததால், அந்த நடவடிக்கைகள் பயனற்று போனது. அதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிரந்தர தீர்வாக இருக்கும்.

எனவே, பெருங்குடி, நெசப்பாக்கம் ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மொத்தம் ரூ.84 கோடியில் 3-ம் நிலை சுத்திகரிப்பு மற்றும் சக்திவாய்ந்த வடிகட்டி (TTUF- Tertiary Treatment Ultra Filter) மூலம் சுத்திகரிக்க இருக்கிறோம். இரு மையங்களிலும் தினமும் தலா 10 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து பெருங்குடி ஏரி, போரூர் ஏரி ஆகியவற்றில் விட இருக்கிறோம். அது ஏரி நீருடன் கலந்த நிலையில், அதை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த குடிநீர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் வரவேற்பைப் பொருத்து, சுத்திகரிக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

ரூ.40 செலவு

டிடிஆர்ஓ, கடல்நீர் சுத்திகரிப்பு முறையில் சுத்திகரிக்கும்போது 1000 லிட்டர் நீரை சுத்திகரிக்க ரூ.40 வரை செலவாகிறது. ஆனால் டிடியுஎஃப் முறையில் சுத்திகரிக்க ரூ.17 வரை தான் செலவாகிறது. இப்பணிகள் முழுவதும் கணினி முறையில் செய்யப்படுவதால், தவறு நடந்தால், உடனே இயக்கம் நின்றுவிடும். அதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு ஒரு சிறந்த மாற்று நீராதாரமாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x