Published : 01 May 2019 09:56 AM
Last Updated : 01 May 2019 09:56 AM

ஓசூரில் சப்-கலெக்டராக பணிபுரிந்த போது ரூ.1500 கோடி நில மோசடியை அம்பலப்படுத்திய மதுரை ஆட்சியர்

மதுரை ஆட்சியராகப் பொறுப் பேற்றுள்ள எஸ்.நாகராஜன், ஓசூர், கன்னியாகுமரியில் பல்வேறு நில மோசடிகளை அம்பலப்படுத் தியவர் என்பதோடு கனிமங்களை வெளிமாநிலத்துக்கு கடத்துவதை தடுத்து நிறுத்தியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றதாக எழுந்த சர்ச்சையில் நீதிமன்ற உத்தரவால் மதுரை ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக எஸ்.நாகராஜன் புதிய ஆட்சியராகவும், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப் பட்டார்.

இவர் ஆரம்பத்தில் ஓசூர் சப்-கலெக்டராகவும், அதன்பின் வேலூர், கன்னியாகுமரி, தேனியில் ஆட்சியராகவும் பணியாற் றினார். சுகாதாரம் மற்றும்குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய இவர், தற்போது மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆட்சியர் நாகராஜன் அரசு நிர்வாகத்தில், தான் பணிபுரிந்த இடங்களில் நேர்மையாகவும், அதிரடி முடிவுகளை எடுத்து மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிப் பெயரெடுத்தவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சப்-கலெக்டராக பணிபுரிந்தபோது, அரசு அதிகாரிகள் துணையுடன் நடந்த ரூ.1,500 கோடி மதிப்புள்ள ‘ஜூரோ பைமாஸ்’(zero by mash) என்ற அளவிடப்படாத நில மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். சர்வே எண், வரைபடம், பட்டா, உரிமை ஆகியன இல்லாத நிலங்களைத்தான் வரு வாய்த்துறையில் அளவிடப்படாத (ஜீரோ பைமாஸ்) நிலங்கள் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த நிலங்கள் ஓசூர் தாலுகாவில் 2,500 ஏக்கர் இருந்தது. 1963-ம் ஆண்டில் தமிழகம் முழுவ தும் நிலச் சீர்திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டு, ஜீரோ பைமாஸ் இனாம் நிலம் ஒழிக்கப் பட்டு அவை அனைத்தும் அரசின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஓசூரில் மட்டும் வருவாய்த்துறையின் மெத்தனத்தால் ஜீரோ பைமாஸ் நிலங்கள் அரசின் கீழ் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் அதிபர்கள், முக்கிய அரசியல் புள்ளிகள் துணையுடன் மோசடியாக போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த நிலங்களைப் பத்திரப்பதிவு செய்தனர். இந்த மோசடியை ஓசூர் சப்-கலெக்டராக பணியாற்றிய நாகராஜன் கண்டுபிடித்தார். மோசடியாக விற்கப்பட்ட ஜீரோ பைமாஸ் இனாம் நிலத்தின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1,500 கோடியாகும். இவரின் நடவடிக்கையால் ஓசூரில் ஜீரோ பைமாஸ் நிலத்தை தற்போது வரை பத்திரப்பதிவு செய்ய தடை நீடிக்கிறது.

குமரி மாவட்டத்தில் இவர் ஆட்சியராகப் பொறுப்பேற்றபோது மலைகள் உடைப்பு அதிகமாக நடந்தது. இயற்கை வளங்களை கபளீரகம் செய்து, பாறை, மணல் கேரளாவுக்கு அதிகமாக கடத்தப் பட்டன. இதையறிந்த ஆட்சியர் நாகராஜன், மலைகளை உடைக்கத் தடை விதித்து அதற்குக் காரணமானோருக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்தார். பிரச்சினையுடன் ஆட்சியர் அலுவல கத்துக்குச் செல்வோருக்கு சரியான தீர்வு, உரிய விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸாருக்கு குமரி மாவட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலம் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் அனுபவத்தில் இருந்தது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்ததை ஆட்சியராக இருந்த நாகராஜன் நீதிமன்றம் மூலம் சுமூகத் தீர்வு கண்டார்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கெ னவே கிரானைட் குவாரிகள் மோசடி, அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. தனியாரால் மதுரையில் வைகை ஆறு, ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தற்போது மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், அம்ரூத் திட்டம், முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற மிகப்பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. இந்தத் திட்டங்களை விரைவாக முடிக்க புதிய ஆட்சியர் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x