Last Updated : 16 May, 2019 12:00 AM

 

Published : 16 May 2019 12:00 AM
Last Updated : 16 May 2019 12:00 AM

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிறப்பு- இறப்பு சான்றிதழ் பெற அலைக்கழிப்பு: நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேரிடும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு பதிவுச் சான்றிதழ் பெற அலைக் கழிக்கப்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில், பெரும் பாலானோர் கிராமப்புற ஏழை, எளிய மக்கள். இந்த மருத்துவமனையில் தினமும் 30 முதல் 35 குழந்தைகள் பிறக்கின் றன.

இந்நிலையில், அரசு மருத்துவ மனையில் நேரிடும் பிறப்பு- இறப்புகளைப் பதிவு செய்ய மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் பிறப்பு- இறப்பு பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. பதிவுச் சான்றிதழ் பெற இங்கு செல்வோர் அலைக் கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியது: அரசு மருத்துவமனையில் நேரிடும் பிறப்பு- இறப்புகள் இலவச மாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், பதிவுச் சான்றிதழ் பெறுவதில் உள்ள பல்வேறு நடைமுறைகளால் அலைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பிறப்பு- இறப்பு பதிவு மையத்தில் வழங்கும் செலுத்துச் சீட்டை, ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கருவூலத்தில் அளித்து அதில் கருவூலத்தின் பதிவெண், சீல் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்று கட்டணம் கட்டி, வங்கி அளிக்கும் செலுத்துச்சீட்டு பகுதியை மீண்டும் அரசு மருத்துவமனையில் அளித்து, பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இதன்படி, 10 கிமீ அலைய வேண்டியுள்ளதால், வாடகை வாகனம் அல்லது பேருந்தில் மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு மிகக் கடினமாக உள்ளது. மருத்துவமனையில் இறக்கும் நபருக்கு இறப்புச் சான்றிதழ் பெறவும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. எனவே, இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசு மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மருத்துவ மனையில் உள்ள பிறப்பு- இறப்பு பதிவு மைய வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியது: அரசு மருத்துவமனையில் நேரிடும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு சான்றிதழ் பெறுவதில் 25.12.2018 முதல் தமிழ்நாடு முழுவதும் இதுதான் நடைமுறை. சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதற்கான செலுத்துச் சீட்டை கருவூலத்துக்குச் சென்று பெற்று, மீண்டும் இங்கு வந்து மருத்துவமனை சீல் வைத்துக் கொண்டு, அதன்பிறகு மீண்டும் கருவூலம் சென்று பதிவெண், சீல் வைத்தபிறகு வங்கிக்குச் சென்று கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், மக்களின் அலைச்சலைக் குறைக்கும் நோக்கில் கருவூலத்திடம் இருந்து செலுத்துச்சீட்டை மொத்தமாக பெற்று, மருத்துவமனையின் சீலை வைத்து அளித்து வருகிறோம். இதைத்தவிர அதன் நடைமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், அரசும்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.

ஊழியர்களிடம் வாக்குவாதம்

அரசு மருத்துவமனையில் உள்ள பிறப்பு- இறப்பு பதிவு மையத்துக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் வந்த கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த சாகுல் அமீது, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, “பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான செலுத்துச்சீட்டு வழங்கும் பிறப்பு- இறப்பு மைய ஊழியர்கள், கட்டணம் செலுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து கூறாததால், கருவூலத்தில் பதிவெண் வாங்காமல், வங்கிக்குச் சென்றுவிட்டேன். இதனால் தேவையற்ற அலைக்கழிப்புக்கு ஆளானேன். இதுகுறித்து பதிவு மைய ஊழியர்களிடம் கேட்டால், காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதானே என்று அலட்சியம் காட்டுகின்றனர். இப்படியிருந்தால், படிப்பறிவில்லாத கிராமப்புற மக்கள் என்ன செய்ய முடியும்? எனவே, இதுதொடர்பான நடைமுறைகளை விண்ணப்பதாரரிடம் விளக்க பிறப்பு- இறப்பு பதிவு மைய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்துவதுடன், வீண் அலைச்சலை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x