Last Updated : 05 May, 2019 12:00 AM

 

Published : 05 May 2019 12:00 AM
Last Updated : 05 May 2019 12:00 AM

கர்நாடக மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: உளவுத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

கேரள எல்லையோர பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் கர்நாடகா வுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத் துள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த 21-ம் தேதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 9 இடங் களில் நடந்த தொடர் குண்டுவெடிப் பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற் றுள்ள நிலையில், அதன் ஆதரவாளர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவி உள்ளதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக உளவுத்துறை அதிகாரிகள் உள் துறை அமைச்சர் எம்பி பாட்டீலுக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கர்நாடகாவை ஒட்டியுள்ள கேரள மாநிலம் காசர்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளனர். எனவே எல்லையோர பகுதிகளான மங்களூரு, மைசூரு, குடகு, கார்வார் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகள், உள்துறை செயலாளர்களுடன் பெங்களூருவில் உள்ள தலை மைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேவை யான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனிடையே கர்நாடக காவல் துறை டிஜிபி நீலமணி ராஜு அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல் ஆணையர் களுக்கும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன் எதிரொலியாக, பெங்களூருவில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் உள்ளிட்ட இட‌ங்களில் நேற்று வெடிகுண்டு கண்டறியும் கருவி, மோப்ப நாய் மூலம் போலீஸார் சோதனை நடத்தினர்.

இதேபோல மைசூரு, மங்களூரு, ஹூப்ளி, குடகு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் ஹம்பி, மடிகேரி, சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x