Published : 08 May 2019 06:07 PM
Last Updated : 08 May 2019 06:07 PM

கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்  நீக்கப்பட்டது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருத்துவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 45000 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் நீக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மீனவர் கூட்டமைப்பு  கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருத்துவர்கள் அதிகம் வசிக்கும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஒக்கி புயல் தாக்கியபோது அரசு  பராமுகமாக இருந்ததால்,  மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையதரப்பில், “2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பது பற்றி சரிபார்த்திருக்க வேண்டும்” என  விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் 45000 வாக்காளர்கள் மொத்தமாக பட்டியலில் இருந்து விடுபட்டதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x