Published : 31 May 2019 09:17 PM
Last Updated : 31 May 2019 09:17 PM

வியாபாரியிடம் ரூ.80 ஆயிரம் பணம் பறித்த போலீஸார்மீது ஏன் வழக்குப் பதியவில்லை?- மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

வியாபாரியை மிரட்டி ரூ.80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவல்லிக்கேணி போலீஸார்மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? என்று மாநில மனித உரிமை ஆணையம் காவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 19-ம் தேதி சேப்பாக்கம் முஹம்மத் அப்துல்லாஹ் இரண்டாவது தெருவில் வசிக்கும் சாகுல் அமீது (33) என்கிற வியாபாரியின் அறையில் புகுந்த திருவல்லிக்கேணி எஸ்.ஐ.ராஜசேகரன், தலைமை காவலர்கள் ஆனந்தராஜ், அஷோக்குமார் ஆகியோர் சோதனை செய்துள்ளனர்.

அப்போது 90 லேப்டாப் மற்றும் 500 மொபைல் போன் 30 கிராம் தங்கம், வெளிநாட்டு சாக்லேட், கொரியாவைச் சேர்ந்த விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்து  அதற்கு பில் கேட்டுள்ளனர். தகுந்த ஆதாரங்களை கொடுக்க முடியாத காரணத்தினால் அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரில் உள்ள தேநீர் விடுதிக்கு அழைத்து வந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர்.

அவர் இல்லை என்று கூறியவுடன் அவரை மிரட்டி பணம் ரூபாய் 80 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னணியில் தலைமை காவலர் சன்னி லாய்டு இருந்து பேசி முடித்துள்ளார். அவரிடம் பேசிய பின்பு தான் பணம் கொடுத்ததாக வியாபாரிகள் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட சாகுல்ஹமீது என்பவருடன் 25 நபர்கள் உதவி ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி ஆய்வாளரை சந்தித்து மேற்கண்ட தகவலைக்கூறி புகார் கூறினர். கடந்த 2 மாதங்களாக இது போன்று பல சம்பவங்கள் தலைமை காவலர் சன்னி லாயிட்  மற்றும் சில காவலர்களால் நடைபெறுவதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடந்து பணம் கொடுத்ததாகவும் வாய்மொழி புகார் தெரிவித்தனர்.

இதனிடையே வியாபாரிகள் தரப்பு புகார் காவல் ஆணையர் கவனத்துக்கு சென்றதை அடுத்து அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் அறிக்கையைப்பெற்ற காவல் ஆணையர் மேற்கண்ட செயலில் மூளையாக செயல்பட்ட சன்னி லாய்ட் உள்ளிட்ட 4 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். காவலர்கள் 80 ஆயிரம் லஞ்சம் பெற்றதால் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும்போதாது வழக்குப்பதிவும் செய்யப்படவேண்டும் என்று புகார் எழுந்தது.

இதுகுறித்த பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. லஞ்சம் வாங்கிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்பது குறித்து  நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x