Published : 31 May 2019 03:14 PM
Last Updated : 31 May 2019 03:14 PM

அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட அரசு உத்தரவு: அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 29 அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மத்திய அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் சேராவிட்டால் அடுத்த ஆண்டுமுதல் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே  மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

இதனால், அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் எனக் கருதப்படுகிறது. தென்மண்டல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயம் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் (அதாவது 40, 50, 80, 100) சேர்க்கை செய்யப்படுகின்றனர்.

2019-20-ம் கல்வி ஆண்டு முதல் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமங்கள் அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையில் 30 விழுக்காடு மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம்.

30 விழுக்காட்டிற்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களை 2019-20-ம் கல்வி ஆண்டிற்கு பிறகு, 2020-21 கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. அதற்கு அடுத்த ஆண்டு அரசு நிதி உதவிபெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து பின்பற்றும் தமிழக அரசு 2014-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை அமல்படுத்தவில்லை, இந்நிலையில் தற்போது இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x