Last Updated : 09 Apr, 2019 02:45 PM

 

Published : 09 Apr 2019 02:45 PM
Last Updated : 09 Apr 2019 02:45 PM

பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு: ரஜினி வரவேற்பு

பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு இருப்பதற்கு ரஜினி வரவேற்பு தெரிவித்துள்ளார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் இன்று (ஏப்ரல் 9) காலை வெளியிடப்பட்டது. இதற்கு திரையுலகினர் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'தர்பார்' படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது. இதற்காக மும்பை கிளம்பவுள்ளார் ரஜினி. இதனை முன்னிட்டு தன் வீட்டினருகே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கைக்  குறித்த கேள்விக்கு, "பாஜக நேற்று தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். நீண்ட நாட்களாகவே நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களுடைய கனவாகவும் அது இருந்தது. அவர் பிரதமராக இருக்கும் போது, அவரை சந்தித்து இதை பண்ண வேண்டும் என சொல்லியிருந்தேன்.

இது பெரிய ப்ராஜக்ட். இதற்கு ’பாகீரத்யோஜனா' என்று பெயர் வையுங்கள் என சொன்னேன். அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சாத்தியம் ஆகாததை சாத்தியம் ஆக்குவதற்கு பெயரே ’பாகீரத்யோஜனா’ என்று சொல்லுவார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது.

என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது. ஒரு வேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால், நாட்டிலுள்ள பாதி வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்நிலை உயரும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார் ரஜினி.

தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கவே, “தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இது தேர்தல் நேரம், இதற்கு மேல் நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை” என்று வீட்டிற்குள் சென்றுவிட்டார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x