Published : 01 Apr 2019 01:27 PM
Last Updated : 01 Apr 2019 01:27 PM

சர்ச்சையில் சிக்கிய கோவை எஸ்.பி. பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: கூண்டோடு அனைவரும் இடமாற்றம்

சர்ச்சையில் சிக்கிய கோவை எஸ்.பி. பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கோவை போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தையே அதிர வைத்தது. இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் என எண்ணிலடங்கா பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கும், மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

அரசியல் பின்புலத்தில் பெரிய கும்பல் ஒன்று முகநூலில் பழகி காதலிப்பதுபோல் வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்து வந்தது. இதில் இளம்பெண் ஒருவர் மிரட்டப்பட்டதை அடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த விவகாரத்தை கோவை எஸ்.பி. பாண்டியராஜன் விசாரித்தார். வழக்கு விசாரணை பெரிதாக வெடித்தபோதிலும் வழக்கை சாதாரணமாகக் கையாண்டார். செய்தியாளர்கள் கேள்விக்கு மிரட்டும் வகையில் பதிலளித்த அவர், ''4 பேர் மட்டுமே குற்றவாளிகள், சில வீடியோக்கள் மட்டுமே உள்ளன. அவ்வளவுதான்'' என விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தெரிவித்தார்.

இதற்குமேல் இதுகுறித்துப் பேசினால் நடவடிக்கை எடுப்போம் என பேட்டியில் தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாரைக்கூட அடையாளப்படுத்தக்கூடாது என்பதை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எஸ்.பி. பாண்டியராஜன் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது.

வழக்கு விசாரணை முறையாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கும், பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. இந்நிலையில் கோவையில் மீண்டும் ஒரு சம்பவமாக துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தார்.

இது மீண்டும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலும் கோவை போலீஸார் மெத்தனமாகச் செயல்பட்டனர். குற்றவாளி யார் என பெற்றோர் சந்தேகப்பட்டு கூறிய நபரைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்திய போலீஸார் நேற்றுதான் குற்றவாளி சந்தோஷ்குமாரைக் கைது செய்தனர்.

பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்களை மிக கவனமாகவும், உரிய அக்கறையுடன் கவனிக்கும் பல போலீஸ் அதிகாரிகள் உள்ள நிலையில் இதுபோன்ற அதிகாரிகளால் பொதுமக்கள், சமூக அமைப்புகள், மாதர் அமைப்புகள் கோபமுற்று மீண்டும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோவை எஸ்.பி. பாண்டியராஜன், டிஎஸ்பி ஜெயராமன், ஆய்வாளர் நடேசன் உள்ளிட்டோர் கூண்டோடு மாற்றப்பட்டதாக உள்துறைச் செயலர் உத்தரவிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் எஸ்.பி. பாண்டியராஜனுக்குப் பணி எதுவும் வழங்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக நிரஞ்சன் மார்டி பிறப்பித்த உத்தரவு வருமாறு

கோவை எஸ்.பி.யாக உள்ள பாண்டியராஜன் மாற்றப்படுகிறார். கோவை எஸ்.பி.யாக கோவை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் நியமிக்கப்படுகிறார்.

பொள்ளாச்சி சப்டிவிஷன் டிஎஸ்பி ஜெயராமன் மாற்றப்பட்டு ஊட்டி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி கே.ஜி.சிவகுமார் பொள்ளாச்சி சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர் நடேசன் மாற்றப்பட்டு கோவை நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆர்.வெங்கட்ராமன் பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்

என உத்தரவிட்டுள்ளார்.

மூவருக்கும் வேறு இடத்தில் பொறுப்பு வழங்கப்படவில்லை.

கோவை எஸ்.பி. பாண்டியராஜன் குரூப்-1 அலுவலர். திருப்பூர் மாவட்ட ஏடிசியாக இருந்தவர் கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோயில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றைத் தொடங்கியது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலைவரை பெண்களால் ஆவேசத்துடன் நடத்தப்பட்டது.

மாலையில் திடீரென போராட்டம் செய்தவர்கள்மீது, பெண்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் ஏடிசி பாண்டியராஜன். அவரே முன்னின்று பெண்களைத் தாக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கையால் அறைந்தார். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அடி தாளாமல் அந்தப் பெண் கீழே விழுந்தார். அவரது செவித்திறன் பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் நிராதரவான பெண்ணைத் தாக்கிய ஏடிசி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க கோவையில் சட்டம் ஒழுங்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெயரைச் சொன்னதன் மூலம் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட பாண்டியராஜன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டாலும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பது காவல் துறையின் சாதாரண நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x