Published : 03 Apr 2019 01:30 PM
Last Updated : 03 Apr 2019 01:30 PM

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பெருமிதம்

``காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர்” என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மூன்று இடங்களில் நடைபெற்றது. பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு தூத்துக்குடி, புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் கோவை ஆகிய இடங் களில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். தூத்துக்குடி யில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தர ராஜனை ஆதரித்து அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசு சிறப்பான ஆட்சியைத் தந்துள்ளது. கடந்த முறை தமிழகத் தில் பாஜக போட்டியிட்டபோது வலுவான கூட்டணி இல்லை. பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. இருப்பினும் தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதா கிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தென் மாநிலங்களை பாஜக ஒருபோதும் புறக்கணித்ததில்லை.

சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்புபடி தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்ற தகவல் வந்துள்ளது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர். மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப் போது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜாமீனில் உள்ளவர்கள்

எதிரணியில் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் போன்ற வர்களை நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை காணாமல் போகச் செய்ய வேண்டும்.

புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து நமது விமானப் படையினர் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தனர். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது. நாட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பழிவாங்க வேண்டுமா, வேண்டாமா?.

காஷ்மீர் மாநிலத்தில் பாது காப்பு படைக்கு என சிறப்பு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்வோம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தும். காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். அவரது கருத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி. அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 13-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் 14-வது நிதிக்குழுவில் ரூ.5,42,068 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.40 லட்சம் வரை வருமானம் வரக்கூடிய வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு, ரூ.60 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கு வரு மான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீனவர் நலன் காக்க தனித்துறை அமைக்கப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ. 23 ஆயிரம் கோடி, ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி, பாரத் மாலா திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி, சாகர் மாலா திட்டத்துக்கு ரூ.1.10 லட்சம் கோடி, கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ரூ. 28 ஆயிரம் கோடி என தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது. மோடி மீண்டும் பிரதமராகும்போது இன்னும் ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு வரும் என்றார் அமித்ஷா.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெணா விலக்கு பகுதியில் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து அமித்ஷா பேசியதாவது: முதன்முகலாக ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்திய முதல்வரென்றால் அது எம்ஜிஆர்தான். மோடி அரசு 50 கோடி மக்களுக்கும் மேலாக மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 7 கோடி வீடுகளில் காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8 கோடி கழிவறைகளும், 2.5 கோடி வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 2.35 கோடி மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் ஒரு மக்களவை உறுப்பினர் இருந்தாலும் மத்திய அரசு எந்த திட்டத்திலும் குறை வைக்கவில்லை என்றார்.நாட்டுக்கு வலிமையான தலைமை தேவை: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: 130 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாட்டில் வலிமையான தலைமையும், நிலையான ஆட்சியும் தேவை. இந்த இரண்டையும் கொடுக்கக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி.

துரோகிகள் செய்த சதி காரணமாக 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்துள்ளது. அவர்களை இந்த தேர்தல் மூலம் வீழ்த்த வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி.

ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் 28.9.2010-ல் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, திமுக நினைத்திருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் தடுத்திருக்கலாம். ஆலைக்கு ஆதரவாக திமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை காட்டி, ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில் நாடகம் போடும் திமுகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், மக்களின் எண்ணங்களை, உணர்வுகளை மதித்து ஆலையை அதிமுக அரசு மூடியது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x