Published : 14 Apr 2019 11:39 AM
Last Updated : 14 Apr 2019 11:39 AM

இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்தவர் பிரதமர் மோடி: வைகோ விமர்சனம்

இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்தவர் பிரதமர் மோடி என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"பல பிரதமர்களோடு வாதிடக்கூடிய வாய்ப்பை கடந்த காலங்களில் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு பிரதமரும் மோடியைப் போல ஆபத்தாகப் பேசியது இல்லை. புல்வாமா தாக்குதலில் வீரர்கள் 42 பேர் இறந்துபோனார்கள். அவர்கள் சிந்திய ரத்தத் துளிகளுக்கு தலைவணங்கி நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். ராணுவ வீரர்கள் இந்த நாட்டின் சொத்து, காவல் தெய்வங்கள். அவர்களை எந்தக் கட்சியும் உரிமை கொண்டாட முடியாது; இதுவரை யாரும் உரிமை கொண்டாடியதும் கிடையாது.

ஆனால் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி எல்லை தாண்டி பேசுகிறார். இவர் கையில் மறுபடியும் அதிகாரம் வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது. உயிர் துறந்த 42 பேரின் ரத்தத்தை நினைத்து முதல் வாக்காளர்கள் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகிறார். யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்கள்? இப்படிப் பேசுவது, சர்வாதிகாரியின் பேச்சு அல்லவா? முசோலினி போன்றவர்கள் பேச்சு அல்லவா? ஹிட்லர், இடி அமீன் போன்றவர்களின் பேச்சு அல்லவா? நாட்டின் பிரதமர் இப்படிப் பேசலாமா? ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கின்ற விதத்தில் இருக்கிறது அவரது பேச்சு.

பெங்களூருவில் இருக்கும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தோடு சேர்த்து, தஸ்ஸால்ட் ஏவியேஷன் என்கின்ற பிரெஞ்சுக் கம்பெனியோடு போர் விமானங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, முதலில் உங்களுக்கு 18 விமானம் தான் நாங்கள் தருவோம். மீதி 108 விமானங்களை பெங்களூரில் நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். நாங்கள் தொழில்நுட்பம் தருகிறோம் என்றார்கள். இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது போட்ட ஒப்பந்தம்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அனில் அம்பானியை அழைத்துக்கொண்டு போனார். அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிந்தார். புதிய ஒப்பந்தம் போடுகிறார். இந்தப் புதிய ஒப்பந்தத்தில் நம்முடைய பொதுச் சொத்தான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் கிடையாது. போர்த் தளவாடங்களுக்கு ஒரு ஆணிகூட செய்யும் அனுபவம் இல்லாத அனில் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்று, 'அம்பானி டிஃபென்ஸ்' என்று உப்புமா கம்பெனியைத் தொடங்கி, இந்தக் கம்பெனியோடு தஸ்ஸால்ட் ஏவியேஷனை ஒப்பந்தம் செய்ய வைத்து, 526 கோடிக்கு வாங்குகின்ற விமானத்தை, 1,670 கோடிக்கு வாங்க நீங்கள் பேரம் பேசி ஒப்பந்தம் போட்டீர்கள் என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பகிரங்கமாக வெளியிட்டது.

அரசாங்க ஆவணங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று நீங்கள் மிரட்டிப் பார்த்தீர்கள். பின்பு நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கூறினார், திருடிச் செல்லவில்லை. நகல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று. நீங்கள் வழக்குப் போட்டால் போடுங்கள். நாங்கள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் என்று 'தி இந்து' பத்திரிகை உரிமையாளர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் விமானப் படைதான் முக்கியமான படை. பிரதமர் நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டார்".

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x