Published : 10 Apr 2019 01:40 PM
Last Updated : 10 Apr 2019 01:40 PM

அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் பெரியளவில் பேரம் நடந்திருக்கிறது; பாமகவில் இருந்து விலகிய பொங்கலூர் மணிகண்டன் குற்றச்சாட்டு

பாமகவின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து பொங்கலூர் மணிகண்டன் திடீரென விலகியுள்ளார். கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியிலுருந்தும் விலகியுள்ளார்.

பாமக - அதிமுக கூட்டணி குறித்து பல குற்றச்சாட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.கோவையில் இன்று (புதன்கிழமை) பொங்கலூர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: "ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, அவருக்கு எதற்கு காவல்துறை பாதுகாப்பு, அவர் என்ன ஒபாமாவா என கேட்டவர் அன்புமணி ராமதாஸ். அவரை 'டயர் நக்கி' என சேலத்தில் அன்புமணி சொன்ன போது நானும் பக்கத்தில் இருந்தேன். இந்த கூட்டணியில் இணைந்ததற்கு பெரிய பேரம் நடந்திருக்கிறது. இது வியாபார கூட்டணி; பேர கூட்டணி. 

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளராக ராமதாஸ் என்னை நியமித்தார். எல்லா தொகுதிகளுக்கும் செல்லும் போது மக்கள் அந்த கூட்டணியைக் காறித் துப்புகிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு என்னென்னவோ பேசிவிட்டு ஒரு மாதத்தில் மாறுவதை எப்படி நம்புவது? வன்னியர் சமுதாயத்தினரையும், என்னை போன்று தமிழ்நாட்டில் உள்ள மற்ற சமுதாயத்தினரையும் அடகு வைத்து விட்டார்கள் என குற்றம்சாட்டுகிறேன். அவர்கள் பேசும் கொள்கைகளில் உண்மை இல்லை. 

எல்லாவற்றிலும் பேரம் நடக்கிறது. பாமக வெளியிடும் அறிக்கைகள், போராட்டங்களின் பின்னணியிலும் பேரம் உள்ளது.மது ஒழிப்புக்காக போராட்டம் நடத்துவார்கள். ஆனால், அந்தந்த பகுதிகளில் பணம் வாங்கிக் கொள்வார்கள். 'கழகத்தின் கதை' என ராமதாஸ் புத்தகம் வெளியிட்டார். அதனை இப்போது படித்தால் தூக்குப் போட்டு சாக வேண்டிவரும். ஜெயலலிதாவை கேவலமாக, கொடூரமாக விமர்சித்திருக்கிறார். பழனிசாமியை திட்டாத வார்த்தைகளே இல்லை. அவர் சொன்னதை என்ன செய்வது? தீ வைத்து எரித்து விடலாமா?

தேர்தலுக்கு பிறகு மக்களிடம் மீண்டும் பொய் சொல்வார்களா?"

இவ்வாறு பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x