Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM

ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த அரசு அறிவுறுத்திவரும் நிலையில் மாநகராட்சி கட்டுமானங்களில் தரமற்ற எம்-சாண்ட்: தடுக்கும் விதிகளை உருவாக்க ஆணையர் கோ.பிரகாஷ் நடவடிக்கை

சென்னை மாநகராட்சி கட்டுமானப் பணிகளில் தரமற்ற எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தடுப்பதற்கான விதிகள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆற்று மணல் உருவாக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இது நிலத்தடி நீராதாரத்தை பெருக்குகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆறுகள் பாய்கின்றன. கட்டுமானத்துக்கு முக்கிய மூலப்பொருளாக ஆற்று மணல் விளங்குவதால், பல ஆறுகளில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

அதனால் மாநில அளவில் 6 இடங்களில் மட்டுமே தற்போது ஆற்று மணல் அள்ளப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், அதற்கு மேல் குவாரிகளை திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை. ஆற்று மணலுக்கு மாற்றாக எம்-சாண்டைப் பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. பல்வேறு அரசுத்துறை கட்டுமானங்களுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக எம்-சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. ஆறுகளே இல்லாத வளர்ந்த நாடுகளில் எம்-சாண்டைக் கொண்டுதான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எம்-சாண்ட் எப்படி இருக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தரமான எம்-சாண்டை பயன்படுத்தினால்தான் கட்டிடம் உறுதியாகஇருக்கும். அதனால் முதல்வர் கே.பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, எம்-சாண்ட் எப்படி இருக்க வேண்டும்,எம்-சாண்ட் உற்பத்தி, கண்காணிப்பு தொடர்பாக பொதுப்பணித் துறை பல்வேறு வரையறைகளை வழங்கியுள்ளது. அவை தொகுக்கப்பட்டு, தொழில்நுட்ப கையேடாக உருவாக்கி அனைத்து அரசுத் துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள விவரங்களின்படி, பாறைகளை ‘நேர்தண்டு தாக்கு விசை கருவி (Vertical Shaft Impactor)’ மூலம் உடைத்து, நீரில் கழுவி, நுண் துகள்களை அகற்றிய பிறகு கிடைப்பதே தரமான எம்-சாண்ட். 4.75 மிமீ அளவுக்கு மிகாமல், 75 மைக்ரான் அளவுக்கு குறையாமல் கன வடிவில் உள்ள கற்கள் அல்லது துகள்களை எம்-சாண்ட் என்கிறோம். இதில் 75 மைக்ரானுக்கு குறைவான நுண் துகள்கள் 15 சதவீதம் கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. அதை கள பொறியாளர்கள் பரிசோதிக்க பகுப்பாய்வு ஜல்லடையும் உள்ளது.

எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள், அவர்களது உற்பத்தி மையத்தில் ‘நேர்தண்டு தாக்கு விசை கருவி’ மட்டுமே வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான அனுமதியை வழங்க பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) தலைமையில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தர நிர்ணய நிறுவனம், பல்வேறு வீட்டுவசதி வாரியங்கள் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

இவர்கள் அனைவரும் சேர்ந்து, எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்குகின்றனர். இதுவரை 60 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு லோடுக்கும், அவர்கள் பெற்றுள்ள அனுமதி சான்றின் நகலை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.

விதிமுறைகள் இவ்வாறு இருக்க, சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பெரும்பாலான கட்டுமானங்களில், தரமற்ற எம்-சாண்ட் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மழைநீர் வடிகால், நடைபாதைகள் அமைக்க பயன்படும் ரெடி மிக்ஸ்களிலும் குவாரி தூசு எனப்படும் அவல் போன்ற தட்டை வடிவ கற்களும், காற்றில் பறக்கும் தூசும் அதிக அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவ்வாறு தரமற்ற எம்-சாண்ட் பயன்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:பொதுவாக ஒப்பந்ததாரர்கள், எளிதில், விலை மலிவாக கிடைக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள். தரமான எம்-சாண்ட் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதனால் குவாரி தூசுகளையே பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்தி செய்யப்படும் கட்டுமானங்களில் நிச்சயம் உறுதித்தன்மை கேள்விக்குறிதான்.

மாநகராட்சி நிர்வாகம் இன்றுவரை, மணலுக்கான விலைப்பட்டியல்படிதான் டெண்டர் கோருகிறது. ஒரு கனஅடி மணலுக்கு ரூ.140 என விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் மாநகராட்சி கட்டுமானங்களில் ஒப்பந்ததாரர்கள் எம்-சாண்டைப் பயன்படுத்துகின்றனர்.

மாநகராட்சிக்கு நஷ்டம்ஒரு கனஅடி எம்-சாண்ட் ரூ.50-க்கு கிடைக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு ஒரு கன அடிக்கு ரூ.90 நஷ்டம். மாநகராட்சி நிர்வாகம் எம்-சாண்ட்க்கு ஏற்ற வகையில் விலைப்பட்டியல் மற்றும் டெண்டர் நடைமுறைகளை மாற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷிடம் கேட்டபோது, “மாநகராட்சி கட்டுமானப் பணிகளில் தரமான எம்-சாண்ட் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான விதிகள் உருவாக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி போன்ற 3-ம் நபர் தர பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x