Published : 17 Apr 2019 04:10 PM
Last Updated : 17 Apr 2019 04:10 PM

மீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

மதுரையில் இன்று (புதன்கிழமை) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அந்நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வந்திருந்தார்.

திருக்கல்யாண விழா பேட்ஜை அணிந்திருந்த ராஜ்சத்யன் அங்கிருந்த மக்களைப் பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் வேட்பாளர் ஒருவர் பொதுமக்களைப் பார்த்து தனித்தனியாக கும்பிட்டுச் செல்வதும் விதிமீறல் என்றே கூறப்படுகிறது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் சுதிரிடம் கேட்டபோது, "தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபிறகு மக்களிடம் வேட்பாளராக தன்னை ஒருவர் அறிமுகப்படுத்தும் நோக்கில் முன்னிலைப்படுத்துவது விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.

அதேபோல் சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாக்கு சேகரிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் என்ன நோக்கத்தில் மக்களைப் பார்த்து கும்பிட்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை கோயிலிலும் அவர் கட்சிக்கரை வேட்டியில் சென்று கும்பிட்டிருந்தார் என்றால் அது பிரச்சாரத்துக்கே நிகராகும். எங்களுக்கு ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம்" என்றார்.

முன்னதாக கடந்த வாரம், மதுரை தபால் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சேகரித்ததாக ராஜ்சத்யன் சர்ச்சையில் சிக்கினார்.

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் கடந்த 10-ம் தேதி காலை காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அங்குவந்த அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் அங்கிருந்த போலீஸாரிடம் கை கூப்பி வணக்கம் தெரிவித்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது.

 

 

"வாக்குப் பதிவு நடக்கிற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வது அப்பட்டமான விதிமீறல். அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது" என போலீஸாரிடம் அமமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ராஜ்சத்யன் மக்களைப் பார்த்து இருகை கூப்பி கும்பிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x