Published : 12 Sep 2014 04:04 PM
Last Updated : 12 Sep 2014 04:04 PM

பாஜக அறிவித்த நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் அதிமுகவில் இணைந்தார்

பாஜக சார்பில் நெல்லை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வேட்புமனுவை வாபஸ் பெற்ற வெள்ளையம்மாள் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக அதிமுக இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று (வெள்ளிக்கிழமை) பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இம்மாதம் 18-ஆம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜி.பி.ஆர். வெள்ளையம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, அவரும், அவருடைய கணவரும், பாஜக வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளருமான கணேச பெருமாள்ராஜா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். முத்துக்கருப்பன், எம்.பி., ஆகியோரும் உடன் இருந்தனர்.

சென்னை மாநகராட்சி 166-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வரும், மாநில செயற்குழு உறுப்பினருமான நீதி சேவியர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, அவரும் நேரில் சந்தித்து தன்னைக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x