Published : 18 Apr 2019 09:34 AM
Last Updated : 18 Apr 2019 09:34 AM

சொந்த ஊரில் வாக்களித்த முதல்வர் பழனிசாமி : தமிழிசை, ப.சிதம்பரம், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் காலையிலேயே வாக்களிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

வாக்குச்சாவடியிலிருந்து 100 அடிக்கு முன்னதாகவே கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து நடந்து வந்த அவர் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார்.

முதல்வர் வருகையை ஒட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலையில் இருந்தே பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்களோடு இணைந்து வாக்களித்து வருகின்றனர்.

தமிழிசை, எச்.ராஜா வாக்களிப்பு:

முதல்வர் அவரது சொந்த ஊரில் வாக்களித்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்.  அவர் தனது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் மற்றும் மகன் என குடும்ப சகிதமாக வந்து வாக்களித்தார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக தேசிய செயலருமான எச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ப.சிதம்பரம்:

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரம், ஜனநாயகம், சுயமரியாதை, மனித உரிமைகள், எம்மதமும் சம்மதம், பகுத்தறிவு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் இன மாண்பு ஆகிய குணங்கள் வெல்ல வாக்களிப்போம். இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ப.சிதம்பரம். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதே கருத்தைத் தெரிவித்தார்.

ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த கமல்:

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது மகள் நடிகை ஸ்ருதியுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அங்கு மின் தடை ஏற்பட்டதால அவர் வாக்களிக்க சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x