Published : 17 Apr 2019 08:59 AM
Last Updated : 17 Apr 2019 08:59 AM

தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரம்

மக்களவை பொதுத்தேர்தல்,  சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம், புதுச்சேரியில் வேலூர் தொகுதி நீங்கலாக 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நாள் முதல், அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர்.

2 வாரங்களுக்கு மேலாக  அனல் பறக்கநடந்த பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது.

சேலம் மாவட்டம் கருமந்துறை விநாயகர் கோயிலில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, சேலத்திலேயே நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்தார். சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வீதி வீதியாக நடந்துசென்ற முதல்வர், பொதுமக்கள், கடைக்காரர்கள், சாலையோர வியாபாரிகள், பெண்கள் உட்பட பல தரப்பினரிடமும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூரிலேயே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தமிழகம் முழுவதும் சுற்றி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் சென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

வெற்றி பெற்ற பிறகு, சரியாக செயல்படாவிட்டால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வழங்கிய ராஜினாமா கடிதங்களை சென்னை மெரினா காந்தி சிலை முன்பு வைத்து உறுதிமொழி ஏற்று, கமல்ஹாசன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x