Published : 11 Apr 2019 02:53 PM
Last Updated : 11 Apr 2019 02:53 PM

எட்டு வழிச்சாலை விவகாரம்: தோல்வியை ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகுவாரா? - அன்புமணி கேள்வி

8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் கிடைத்துள்ளது பாமகவுக்கு அடுத்த வெற்றி என, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்; அது தமிழக அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த அவரிடம் சென்னை - சேலம் இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே என்று கேள்வி  எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "8 வழிச்சாலை அமையவுள்ள பகுதி தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி ஆகும். புதிய சாலை அமைப்பதன் மூலம் அப்பகுதியில் தொழிற்துறையும், உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நாங்கள் நம்பினோம்.

ஆனால், அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை" என்று கூறியுள்ளார். எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாமக கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் எனது சார்பில் எனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் தான் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாமகவுக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பாமக சார்பில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டம் குறித்த அனைத்து அச்சங்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. பசுமைச்சாலை அமைக்கப்பட இருந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் வழக்கம் போல வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள முடியும். பசுமைவழிச் சாலை மீண்டும் உயிர்பெற்று விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு சற்றும் தேவையில்லை. 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது 5 மாவட்ட விவசாயிகளையும் கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும், மீண்டும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த உலகத்துக்கே உணவு படைக்கும் விவசாயிகள் தான் எனது கடவுள் என்பது தான்; விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் பாமக அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; இப்போது மட்டுமல்ல... இனி எந்தக் காலத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்காக போராட முதல் ஆளாக பாமக களமிறங்கும் என்பதைத் தான். பாமக விவசாயிகளுக்கான கட்சி. தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க பாமக தொடர்ந்து பாடுபடும்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வாங்கியதை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், "சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதிமொழியை முதல்வர் பழனிசாமியிடமிருந்து இந்த வழக்கைத் தொடர்ந்த அன்புமணி பெறுவாரா? அவ்வாறு பெற முடியாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இப்போது அதற்கு பதில் கிடைத்து விட்டது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்பதையும்  தாண்டி, உயர் நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றே முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இப்போதாவது இந்த விஷயத்தில் எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. இதுதொடர்பாக 11.06.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், "8 வழிச்சாலை போடுவது தவறு என்று கூறவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளை கேட்டறிந்து பணியைத் தொடங்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்" என்று கூறினார். 

அதேநாளில் சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை. அதை திமுக முழு மனதுடன் வரவேற்கிறது" என்று கூறினார். இதை விட மோசமான துரோகத்தை விவசாயிகளுக்கு செய்ய முடியாது.

இத்தகைய துரோகத்தைச் செய்த மு.க.ஸ்டாலினுக்கு இச்சிக்கல் குறித்து பேசத் தகுதியில்லை. அதுமட்டுமின்றி இதற்காக விவசாயிகளிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x