Published : 29 Apr 2019 01:42 PM
Last Updated : 29 Apr 2019 01:42 PM

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராக வழக்கு: கார்ப்பரேட் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? - வேல்முருகன் கேள்வி

கார்ப்பரேட் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏப்ரல் 27 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், அங்குள்ள 4 விவசாயிகள் மீது பெப்சி கோ நிறுவனம் தொடுத்த வழக்கொன்று விசாரணைக்கு வந்தது.

'லேஸ் சிப்ஸ்' தயாரிப்பதற்கான 'FL 2027'என்கின்ற பெப்சி கோ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு விதையை அந்த 4 விவசாயிகளும் பயிரிட்டதால், அவர்கள் தலா ரூ.1.05 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்பது தான் பெப்சி கோ தொடுத்த அந்த வழக்கு.

ஒரு தனியார் உளவு ஏஜென்சியை அமர்த்தி, அந்த விவசாயிகளிடம் சென்று, அவர்களின் பேச்சை ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதனை ஆதாரமாகக் கொண்டு இந்த வழக்கைப் போட்டிருக்கிறது பெப்சி நிறுவனம்.

பயிர்ப் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001 இன் பிரிவு 64-ஐ இந்த விவசாயிகள் மீறியுள்ளனர் என்கிறது பெப்சி தொடுத்த மனு.

இதற்கு விவசாயிகள், "இதே சட்டத்தின் பிரிவு 39, விதைகளை சேமித்துப் பயன்படுத்தவும் மறுபயிர் செய்யவும் பரிமாற்றம் செய்யவும், விற்பனை செய்யவும் கூட உரிமை அளிக்கிறது" என்கின்றனர்.

இதன் அடிப்படையில், 2018 இல் தாங்கள் வாங்கிச் சேமித்திருந்த விதையைத்தான் பயன்படுத்தியிருக்கிறோம்; இதனைப் பயிர்ப் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்துக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறோம் என்கின்றனர்.

எனவே இதில், பயிர்ப் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம் தங்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாட வேண்டும்; சிறு விவசாயிகளான தங்களின் வழக்குச் செலவை மரபணு நிதியமே ஏற்குமாறு செய்ய வேண்டும் என்கின்றனர் அந்த விவசாயிகள்.

இந்த 4 விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பெப்சி கோ நிறுவனத்துக்கு எதிராகவும் குஜராத் மாநிலத்தின் மொத்த விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளன என்பது தான் இந்த இக்கட்டான நிலையில் உள்ள ஒரே ஆறுதல்.

தங்கள் அனுமதியன்றி யாரும் உருளைக்கிழங்கு பயிரிடக் கூடாது என்ற நோக்கில் பெப்சி போட்டுள்ள இந்த வழக்கு நாளை எல்லா பயிர்களுக்குமே வரும் ஆபத்தினைச் சொல்வதாக இருக்கிறது.

இந்த வழக்கில் பெப்சிக்கு சாதகமாகத் தீர்ப்பு வருமானால் அந்த ஆபத்து உண்மையாகிவிடும் என்பதுதான் நமது அச்சமும் வேதனையுமாயிருக்கிறது.

ஆகவே, கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்கவும் விவசாயிகளைக் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?" என, வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x