Published : 16 Sep 2014 05:04 PM
Last Updated : 16 Sep 2014 05:04 PM

சகாயத்திடம் புகார் அளிக்க தயாராகும் விவசாயிகள்: கிரானைட் குவாரி அதிபர்கள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் கிரானைட், மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த சிறப்பு அதிகாரியாக முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்தை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில், புதிய புகார்களைத் தெரிவிக்க விவசாயிகள் பலர் தயாராகி வருவதாக கிடைத்துள்ள தகவல், கிரானைட் அதிபர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் இயங்கிய கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக 2012-ம் ஆண்டு மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்துக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அவர் நேரடியாக விசாரணையில் இறங்கினார்.

ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு

91 குவாரிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் சகாயம், இது குறித்து 2012 மே மாதம் 19-ம் தேதி தமிழக தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

இதில், 39,30,431 கன மீட்டர் அளவுக்கு அரசு அனுமதி பெறாத புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.15,721 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமத்தொகை ரூ.617 கோடியும் சேர்த்தால் மொத்த இழப்பு ரூ.16,338 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை அனுப்பப்பட்ட 9 நாட்களில் ஆட்சி யர் பொறுப்பிலிருந்து சகாயம் மாற்றப்பட்டார். அதே நாளான 2012

மே 28-ம் தேதி அன்சுல் மிஸ்ரா மதுரை ஆட்சியராக பொறுப்பேற்றார்.

சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கை மீது அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவல்கள் 2012 ஜூலை மாத இறுதியில் ஊடகங்களில் வெளியாயின. ஆகஸ்ட் முதல் தேதியில் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்ட ஊரக எஸ்பி பால

கிருஷ்ணன் தலைமையில் அதிகாரி கள் குவாரிகளில் சோதனையைத் தொடங்கினர்.

புராதன சின்னங்கள் தகர்ப்பு

ஆகஸ்ட் 2-ம் தேதி தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட்ஸ் தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சோதனையிட்டனர். ஆகஸ்ட் 7-ம்

தேதி பிஆர்பி கிரானைட் நிறுவனத் துக்கு சீல் வைத்தனர். இதனால் வட நாட்டு தொழிலாளர்கள் உட்பட20 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். ஆகஸ்ட் 18-ம் தேதி பிஆர்பி கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியை போலீஸார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து பல குவாரி களில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். புராதனச் சின்னங்களான மலைகளைகூட வெட்டி சிதைத்திருந்தது தெரிந்தது. 80 சதவீத விதிமீறல்கள் பிஆர்பி கிரானைட் நிறுவனங்களில் நடந்த தாக அப்போது புகார் எழுந்தது. பிஆர்பியின் மகன், மைத்துனர் உள்பட பலர் மீது 30 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் 95 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது பிஆர்பி ஜாமீனில் உள்ளார். பல வழக்குகளில் மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த கற்களை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அன்சுல்

மிஸ்ரா மாற்றப்பட்டார். கைப்பற் றிய பொருட்களை திரும்ப ஒப்படைக் கவும், கிரானைட் குவாரியை மீண்டும் நடத்தவும் அனுமதி கேட்டு பிஆர்பி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும், எந்த நேரத்திலும் குவாரி திறக்கப்படலாம் என்ற தகவல் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மேலூர் பகுதியில் பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் சகாயம்

இந்த நிலையில்தான் கிரானைட் மற்றும் மணல் குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், விரைவில் குவாரிகளை செயல்படுத்தலாம் என காத்திருக்கும் குவாரி அதிபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து குவாரி அதிபர் ஒருவர் கூறும்போது, ‘இதுவரை எந்த அதிகாரியும் எங்கள் தொழிலை கண்டுகொள்ளாத நிலையில், சகாயத்தின் நடவடிக்கையால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இழப்பை சந்தித்தோம். அவர் மீண்டும் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால், மேலும் சட்ட சிக்கலையே ஏற்படுத்தும்’ என்றார்.

சகாயத்துடன் ஆய்வு பணியில் தீவிரம் காட்டிய அதிகாரி ஒருவர்கூறும்போது, ‘மதுரை மாவட்ட கிரானைட் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஆதாரங்கள், ஆவணங்கள் மூட்டை,மூட்டையாக உள்ளன.

இதர மாவட்டங்களில் செயல்படும் கிரானைட், மணல், தாது மணல் குவாரிகளில் சகாயம் ஆய்வு செய்தால், புதி தாக பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகலாம். அரசு மட்டத்தில் இந்த ஆய்வுக்கு ஆதரவு இருந்தால்தான், முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியும்.

சகாயத்திடம் மேலும் பல தகவல் களை தெரிவிக்க, மேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர்’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x