Published : 26 Apr 2019 12:00 AM
Last Updated : 26 Apr 2019 12:00 AM

தமிழக மின் வாரியத்தை நம்பாத தேர்தல் ஆணையம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெனரேட்டர்

தமிழக மின்வாரியம், 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கியும், மின்வாரியத்தை நம்பாமல் தேர்தல் ஆணையம், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி, அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.

தமிழகத்தில் ஏப்.18-ம் தேதி மக்களவைத்தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தத் தொகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த மையங்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மையத்துக்குள் யாரும் நுழையாதவாறு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை கண்காணிக்கப்படுகிறது.

இதனால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 24 மணி நேரமும் மின்விளக்குகள் எரிய, கேமரா கண்காணிப்புக்கும் தடையில்லா மின்சாரம் தேவைப்படுகிறது. அதனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மின் வாரியம் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கும். ஆனால், இந்த முறை, அந்த கல்லூரிகள் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மின்வாரியம் சிறப்புக் குழுவை அமைத்து இரவு, பகலாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகம் செய்கிறது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் பகலில் ஒரு தொழில்நுட்ப உதவியாளரும், இரவுப் பணியில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஒயர் மேன் உள்பட இருவர் இருப்பார்கள். ஆனால், தற்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பகலில் சிறப்பு நிலை முகவர் ஒருவர் தலைமையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர், இரவு ஒரு போர்மேன், தொழில்நுட்ப உதவியாளர், ஒயர் மேன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மின்வாரியம், கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தி சிறப்பு கவனம் செலுத்தி வாக்கு எண்ணும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குகிறது. ஆனால், தேர்தல் ஆணையம், மின்வாரியத்தின்

மின்சாரத்தை நம்பாமல் தனியார் நிறுவனம் மூலம் ஜெனரேட்டர்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை வாக்கு எண்ணும் மையத்துக்குப் பயன்படுத்துகிறது.

இரண்டாவது வாய்ப்பாகவே தமிழ்நாடு மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் வாரியம் வழங்கும் மின்சாரம் பல இடங்களைக் கடந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகிறது. அப்போது இயற்கை இடர்பாடுகளால் மரங்கள் சாய்ந்துவிழுந்து மின்வயர் அறுந்து விழலாம். மின்சார டிரான்ஸ்பார்மர்கள் பழுதடையலாம். அதனால், தேர்தல் ஆணையம் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகிறது. நாடு முழுவதுமே தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஆனால், நாங்கள் எங்களால் மின்விநியோகத்தில் எந்தத் தடையும் வராமல் இருக்க 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம், ’’ என்றனர்.

தேர்தல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குத் தடையில்லா மின்சாரம் தேவை. மின்தடை ஏற்பட்டால் கேமரா பதிவுகள் தடைபடும். அதனால், சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜெனரேட்டர்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x