Published : 16 Apr 2019 07:50 AM
Last Updated : 16 Apr 2019 07:50 AM

வடசென்னைக்கு வளம் தரும் வேட்பாளர் யார்?- வாக்குச்சீட்டோடு காத்திருக்கும் மக்கள்

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள 3 தொகுதிகளில் வட சென்னை மக்களவைத் தொகுதிக்கென தனி வரலாறு உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வட சென்னைக்கு அவர்கள் வைத்த பெயர் ‘பிளாக் சிட்டி'. தொழிலாளர்களும் ஏழை எளிய மக்களும் இருப்பதால் அவர்கள் அவ்வாறு பெயரிட்டு அழைத்தனர். இப்போது பிளாக் சிட்டி பெயர் மறைந்திருந்தாலும் அப்போதிருந்த அதே நிலைதான் இப் போதும் நீடிக்கிறது.

தென் சென்னை, மத்திய சென்னையை ஒப்பிடும்போது வட சென்னை பின்தங்கி இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் குப்பை கள், கழிவுநீர் கலந்த குடிநீர், சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர், துர்நாற்றம், ஈக்கள், கொசுக்கள், தமிழகத்தின் மிகப்பெரிய கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு ஆகியவை தான் வட சென்னையின் அடையாளங்கள்.

தொழிலாளர்கள் நிரம்பிய வடசென்னை

1957-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்தான் வட சென்னை தொகுதி உரு வானது. வட சென்னையில் முதல் எம்பி என்ற பெருமையைப் பெற்றவர் அந்தோணிப் பிள்ளை. இவர் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். 1962-ல் காங்கிரஸ் கைப்பற்றியது. 1967-ல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியையும் கூடவே வட சென்னையையும் திமுக கைப்பற்றியது. 1967 முதல் 2014 வரை நடந்த 15 தேர்தல்களில் 10 முறை திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும் அதிமுக, சுயேச்சை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. நாஞ்சில் மனோகரன், மத்திய அமைச்சராக இருந்து மறைந்த என்.வி.என்.சோமு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் போன்றவர்கள் வட சென்னையில் வென்று நாடாளுமன்றத்தில் ஜொலித்தவர்கள்.

கடந்த 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, திமுக வேட்பாளர் ஆர்.கிரிராஜனை 99,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வட சென்னையில் அதிமுக வெல்வது இதுவே முதல் முறை. கடந்த 2009-ல் சட்டப்பேரவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை வென்ற கொளத்தூர், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 5 முறை வென்ற ராயபுரம் மற்றும் திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது வட சென்னை.

காசிமேடு மீன்பிடித் துறைமுகம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், புளியந்தோப்பில் உள்ள நூற் றாண்டு கடந்த இறைச்சிக் கூடம் போன்றவை இந்தத் தொகுதிக்குள் வருபவை.

மீனவர்கள், தலித்துகள், தெலுங்கு பேசும் மக்கள், வடமாநிலத்தவர்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் என இங்கு வசித்தாலும், அவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொழிலாளர்கள்.

இந்தத் தேர்தலில் கலாநிதி வீராசாமி (திமுக), அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக), பி.சந்தானகிருஷ்ணன் (அமமுக), ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம் கட்சி), பி.காளியம்மாள் (நாம் தமிழர்) உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக 10 முறை வென்ற தொகுதி என்பதால் தைரியமாக களமிறங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி. ஸ்டாலின் வென்ற கொளத் தூர் சட்டப்பேரவைத் தொகுதி, அமமுக வேட்பாளர், அதிமுக வாக்குகளைப் பிரிப்பது, தொகுதியில் திமுகவுக்கு உள்ள வலுவான கட்டமைப்பு, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கி போன்றவை கலாநிதிக்கு சாதகமாக உள்ளன.

திமுகவில் முக்கியமான சிலர் இத் தொகுதியை குறிவைத்திருந்த நிலையில் கலாநிதிக்கு வாய்ப்பு கிடைத்ததில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி, கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி இருந்தாலும் வேலை செய்ய நிர்வாகிகள் இல்லாதது, திமுக மாவட்டச் செயலாளர்கள் மத்திய சென்னை, திருவள்ளூர் போன்ற தொகுதி களிலும் கவனம் செலுத்துவது உள்ளிட்டவை கலாநிதிக்கு உள்ள பாதகமான அம்சங்கள்.

வாக்குச்சாவடி அளவில் தேமுதிக தொண்டர்கள் இல்லாததால் அனைத்துக்கும் அதிமுகவையே நம்பியிருக்கிறார் அழகாபுரம் மோகன்ராஜ். சேலத்தைச் சேர்ந்தவரான இவருக்கு தொகுதி புதிது என்பதால் சிரமப்பட்டு வருகிறார். வட சென்னை தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் டி.ஜெயக்குமார், தனது மகன் போட்டியிடும் தென் சென்னையில் கவனம் செலுத்தி வருவதால் பல நேரங்களில் தேமுதிக வேட்பாளர் தனித்து விடப்பட்டுள்ளார். ஆனாலும் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

தான் காவல் துறை அதிகாரியாக பணி யாற்றிய பகுதி என்பதால் மக்களிடம் கொஞ்சம் உரிமையோடு வாக்கு சேகரிக் கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட் பாளர் மவுரியா. நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் கடும் உழைப்பும், தெளிவான பேச்சும் பலரையும் கவர்ந்துள்ளன.

சிறுவணிகர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் வணிகர் சங்கங்களின் ஆதரவைப் பெறுவதில் திமுக, தேமுதிக போட்டி போடு கின்றன. கொடுங்கையூர் குப்பை கிடங்கு, கழிவு நீரில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவுநீர் கலந்து வருதல், தொழிற்சாலைகளால் ஏற் படும் காற்று மாசு, போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்காதது, மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்தாதது ஆகியவை தொகுதி மக்களின் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினைகள்.

இத்தொகுதியில் திமுக, தேமுதிகவுக்கு இடையேதான் கடும் போட்டி. திமுக தனது கோட்டையை மீட்குமா, வட சென்னையில் தேமுதிக தடம் பதிக்குமா என்பதை இத் தொகுதியில் நிரம்பி இருக்கும் வாக்காளர் களான தொழிலாளர்கள் முடிவு செய்ய காத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x