Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் திமுக, அதிமுக, அமமுக

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலேயே அதிக கவனம் பெறும் தொகுதி திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது மறைவையடுத்து, தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக, அதிமுக, அமமுக ஆகிய 3 கட்சிகள் முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தொகுதியில் மீண்டும் வென்று தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில், திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், அமமுக சார்பில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காம ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அருண் சிதம்பரம் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நீர்நிலைகளை தூர் வாருவேன்

கடந்த 2011, 2016 தேர்தல்களில் திமுக தலைவர் கருணாநிதி இங்கு போட்டியிட்டபோது, அவரது வெற்றிக்கு பூண்டி கலைவாணன் பாடுபட்டதுடன், அவரது வெற்றிக்குப் பின்னர் கருணாநிதியின் தொகுதிப் பணிகளைக் கவனித்து வந்தார்.

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர்.

‘‘திருவாரூர் தொகுதியில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளைத் தூர் வார நடவடிக்கை எடுப்பேன். மடப்புரம், சீனிவாசபுரம் பகுதிகளில் பாலம் கட்டுவேன். ரேஷனில் 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்று கூறி பூண்டி கலைவாணன் வாக்கு சேகரித்து வருகிறார்.

கூடுதல் திட்டங்கள் கிடைக்கும்

அதிமுக சார்பில் போட்டியிடுபவர் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம். இவருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காம ராஜ், வேட்பாளருடன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

‘‘நான் வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சி நடைபெறுவதால் திருவாரூர் தொகுதிக்கான திட்டங்களை விரைந்து கொண்டுவருவதுடன், கூடுதல் திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பேன்’’ என்று கூறி ஜீவானந்தம் வாக்கு சேகரித்து வருகிறார்.

பிரச்சினைகளை தீர்ப்பேன்

அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார். மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். இவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில், திருவாரூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிடும் எஸ்.காமராஜ், இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வை ஏற்படுத்துவேன், ஹைட்ரோகார்பன் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களைத் தடுத்து திருவாரூர் தொகுதியைப் பாதுகாப்பேன் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

வெற்றி பெறும் முனைப்பில்...

பிற கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதியில் வாக்கு சேகரித்துவரும் நிலையில், திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் மட்டுமே தொகுதி மக்கள் நன்கு அறிந்த வேட்பாளர்களாக உள்ளனர். வெற்றி பெற்று, தொகுதி மக்கள் தங்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை மற்றவர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும் என்ற நிலையில் திமுக வேட்பாளரும், திமுகவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் அதிமுக வேட்பாளரும், வெற்றிபெற்று தங்கள் கட்சியின் இருப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் அமமுக வேட்பாளரும் முனைப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x